ஹாலிவுட்

‘ஹைநூன்’ - 1952: நீதிக்காக போராடுபவனை கைவிடும் மக்கள் - ஹாலிவுட் மேட்னி 8

ராம்குமார் சுப்பாராமன்

மக்களைக் காக்கும் அதிகாரியை மக்களே கைவிட்ட வேதனையை வெளிப்படுத்துவதுதான் ‘ஹைநூன்’ (HIGH NOON – 1952) படத்தின் ஒன்லைன். காலை 10.30 மணிக்கு ஆரம்பித்து நண்பகல் 12 மணிக்கு ஒரு முகூர்த்த நேரத்துக்குள் முடிந்து விடும் ரியல் டைம் திரைப்படம் இது.

12 மணி ரயிலில் வரும் ஃபிராங்க் மில்லரை வரவேற்க, அவனது தம்பி பென் மில்லர், கூட்டாளிகள் ஜாக் கோல்ட்பி, ஜிம் பியர்ஸ் மூவரும் தனித்தனி குதிரைகளில் ரயில் நிலையத்துக்குச் செல்கிறார்கள். ஒரு பெண், கர்த்தரை வேண்டுகிறாள். வீதியில் சிலர் பீதியடைகிறார்கள்.

மார்ஷல் வில்கேன் மற்றும் எமிக்கு தேவாலயத்தில் திருமணம் நடக்கிறது. வில்-லுக்கு நகரைக் காக்கும் பொறுப்பு இன்றுடன் முடிவடைவதால் மனைவியுடன் வேறு கிராமத்தில் புது வாழ்க்கையைத் தொடங்கப் போகிறார்.

ரயில் நிலையத்தில் மில்லரின் கூட்டாளிகள் காத்திருப்பதைச் சொல்லும் ஸ்டேஷன் மாஸ்டர், ஃபிராங்க் மில்லர் விடுதலையான செய்தியையும் வில்லிடம் சொல்கிறார். 5 வருடங்களுக்கு முன்பு மில்லரை சிறைக்கு அனுப்பியதே இந்த வில்தான்.

திருமண விழாவில் இருந்த அனைவரும் பதற்றத்துடன் புதுமணத் தம்பதியரை சாரட்டில் ஏற்றி, தப்பிச் செல்லச் சொல்கிறார்கள். மணி 10:40. “குற்றவாளிக்குப் பயந்து ஊரைவிட்டுப் போவதா?” என பாதிதூரம் சென்ற வில், சாரட் வண்டியை அப்படியே திருப்புகிறார். புது மனைவி எமியோ, “வேண்டாம்” என்று வற்புறுத்த, மறுக்கிறார் வில். எமி கோபத்தில் செல்கிறாள்.

தனது முன்னாள் காதலி ரமிரஸை சந்திக்கும் வில், “மில்லர் வர்றான், ஜாக்கிரதையா இரு” என்று எச்சரிக்கிறார். அவள், மில்லரின் பழைய காதலியும் கூட. ஒயின் ஷாப்பினுள் நுழையும் வில், தனது உதவிக்கு ஆறுபேரை அழைக்கிறார். யாரும் வரவில்லை.

தேவாலயத்தில் வில்லுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பேசி “நீங்க இல்லேன்னா, கொடுமையான அந்த மில்லர் இங்க வரவே மாட்டான். நீங்க இங்கயிருந்து போறதுதான் நல்லது” என்று தங்களது சுயநலத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஓய்வுபெற்ற மார்ஷல் மார்ட், “நீ குற்றவாளிகள ஜெயிலுக்கு அனுப்புற. நீதிபதிகள் அவனுகள வெளிய விட்றாங்க. நீ சாகப் போற...” என்று பயமுறுத்துகிறார்.

நட்பு, உறவு, ஊர்மக்கள் அனைவராலும் கைவிடப்பட்ட, வில், தன்னைக் கொல்ல வருபவனுக்காக ‘ஐ எம் வெயிட்டிங்’ என தனியாகக் காத்திருக்கிறார். மில்லரின் ஆட்கள் துப்பாக்கியுடன் தயாராகிறார்கள். தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

12 மணி. ரயில் வந்து நிற்கிறது. கூட்டாளிகள் வரவேற்க, மில்லர் ரயிலில் இருந்து குதித்து இறங்குகிறான். நால்வரும் வில்லைத் தேடி தெருவில் நடக்கிறார்கள். எதிர்பாராத தருணத்தில் மனைவி எமி, கணவன் வில்லுக்கு உதவ, சிறையில் இருந்து வந்தவனை திரும்பி வர முடியாத இடத்துக்கு அனுப்புகிறார் வில். கிளைமாக்ஸ் சுருக்கமான துப்பாக்கிச் சுடலுடன் முடிந்தாலும் பதற்றப்பட வைக்கிறது.

ஒட்டுமொத்த மக்களும் வில்-லை நோக்கி வர, வெறுப்புடன் மனைவியோடு அந்த ஊரைவிட்டுச் செல்கிறார் அவர். இதுதான் கதை. அப்போது அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை இருந்தது. திரைப்படத் துறையில் கம்யூனிஸ்ட்டுகள் குறித்த விசாரணைக்காக, இப்படத்தின் திரைக்கதையாசிரியர் கார்ல் ஃபோர்மேன் அழைக்கப்பட்டார்.

ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் உறுப்பினராக இருந்தவர் என்பதால், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சக உறுப்பினர்களின் பெயர்களைச் சொல்ல ஃபோர்மேன் மறுத்ததால், அவரைக் கருப்புப் பட்டியலில் சேர்த்தனர். இதனால், ஹாலிவுட் ஸ்டூடியோக்களில் அவர் பணிபுரிய கடைசியாக அனுமதிக்கப்பட்ட படம் இது. (பின்னர் அவர் பிரிட்டனுக்குச் சென்றார்).

அவருக்கு நடந்த விசாரணையை வைத்துதான், நீதிக்காக போராடுபவனை அனைவரும் கைவிடுகிறார்கள். தனிமனித வலியுடன் அவன் ஊரைவிட்டு வெளியேறுவதாக ஃபோர்மேன் இப்படத்துக்கு திரைக்கதை அமைத்ததாகச் சொல்கிறார்கள். இந்தக் கதை அப்படி இருப்பதாலேயே இதில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த ஜான் வெயின் நடிக்க மறுத்துவிட்டார். பின்னர் ஹீரோ வில்கேன் கதாபாத்திரத்தில் கேரி கூப்பர் நடித்தார். ‘எமி’யாக நடித்திருக்கும் கிரேஸ் கெல்லிக்கு பயந்த முகபாவம்.

குவேய்க்கர் மதத்தைச் சார்ந்த அவர், சகோதரன் மற்றும் தந்தையை துப்பாக்கிக்குப் பலி கொடுத்திருப்பதால், அமைதியை விரும்புவதும், கணவனுக்கு ஆபத்து என்றதும் துப்பாக்கித் தூக்குவதும் ரசிக்க வைக்கின்றன. மில்லர் மற்றும் வில்-லின் முன்னாள் காதலி, ஹார்வியின் இந்நாள் காதலி ‘ரமிரஸ்’. எத்தனைபேர் வேண்டுமானாலும் காதலிக்கலாம்போல, அவ்வளவு அழகு.

இக்கதாபாத்திரத்தில் அலட்சியத்துடன் நடித்திருக்கிறார் கேட்டி ஜுராடா. படத்தின் ஆன்மாவே திமிட்ரி தியோம்கின்-னின் இசைதான். டைட்டிலில் வரும் ‘டூ நாட் ஃபார்ஸேக் மி’ முக்கிய பாடல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தெருக்கள், தேவாலயம், பார், ரயில் நிலையம், ஹோட்டல் என்று ஹேட்லிவில் கிராமம் (கலை இயக்கம் - பென் ஹெய்ன்) பிரமிக்க வைக்கிறது.

கறுப்பு வெள்ளையில் கிராமத்தின் அழகான துயரத்தை, வில்கேனின் தனிமையை, அருமையாகக் காட்சிப்படுத்தியி ருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஃப்ளாய்ட் கிராஸ்பி. ஜான் டபிள்யூ கனிங்ஹாம் எழுதிய ‘த டின் ஸ்டார்’ கதைக்கு கார்ல் ஃபோர்மேன் பரபரப்பான திரைக்கதை எழுதியிருந்தாலும், எல்மோ வில்லியம்ஸின் படத்தொகுப்பு மேலும் படபடக்க வைக்கிறது.

கேரி கூப்பரின் நடிப்பு, படத் தொகுப்பு, இசை, பாடல் என்று 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் இது. நுணுக்கமான காட்சியமைப்புகளுக்கு பெயர்போன ஃப்ரெட் ஸின்னமன் மிரட்டலாக இயக்கியிருந்தார். செர்ஜியோ லியோன், அகிரா குரோசவா, ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் போன்ற பிரபல இயக்குநர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தத் திரைப்படம், வெஸ்டர்ன் படமாக இருந்தாலும், சமூக - அரசியல் நையாண்டி பேசும் ஒன்றரை மணிநேர ஒப்பற்ற படைப்பு.

(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)

- ramkumaraundipatty@gmail.com

SCROLL FOR NEXT