

‘தின்மேன்’ வரிசையின் 6-வது மற்றும் இறுதிப் படைப்பு, ‘சாங் ஆஃப் த தின் மேன்’ (Song of the Thin Man – 1947). காதலனைக் கொன்ற கணவனை, மனைவி கொல்வதுதான் இப்படத்தின் ஒன்லைன். பில் கிரான்ட் என்ற இளைஞனுக்குச் சொந்தமான, எஸ்.எஸ். ஃபார்ச்சூன் சொகுசுக் கப்பலில் டேவிட் தாயர் ஏற்பாடு செய்த நன்கொடைக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடக்கிறது.
ஏகப்பட்ட பணக்காரர்கள் சூதாடுகிறார்கள். ஜாஸ் இசைக்குழுவின் பாடகி ஃபிரான் பேஜ் பாடுகிறாள். நிக்கும், நோராவும் கலந்து கொள்கிறார்கள். படி ஹாலிஸ் என்பவன் கிளாரினெட் வாசிக்க, தலைமை இசைக்கலைஞர் டாமி ட்ரேக்குக்குத் திருப்திகரமாக இல்லை. வாசிக்க விடாமல் தடுக்கிறார்.
வாங்கிய கடனைக்கேட்டு கேங்ஸ்டர் ஆல் அம்பாய் என்பவன், ட்ரேக்கை நெருக்குகிறான். புதிதாக ஒப்பந்தம் செய்திருக்கும் டால்பினிடம் ட்ரேக், 12 ஆயிரம் டாலர் முன்பணம் கேட்க, அவர் மறுக்கிறார். டேவிட்டின் மகள் ஜேனட்டை, காதலிக்கிறான் பில். டேவிட்டின் எதிர்ப்பால், ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
ட்ரேக், பில்-லின் அலுவலகத்திலுள்ள பணத்தை எடுக்க முயல, கதவு வழியே நீளும் துப்பாக்கியால் சுடப்படுகிறார். பத்திரிகைகளின் ‘வான்டட்’ கொலைச்செய்தியில் பில், ஜேனட்டின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
பில்லும், ஜேனட்டும் நிக்கிடம் உதவி கேட்டு வருகிறார்கள். நிக், வெட்டிங் பார்ட்டி தர, இன்னொரு துப்பாக்கிச் சூடு. சரக்கு பாட்டில் நொறுங்குகிறது. போலீஸாரிடம் பில்-லை காட்டிக் கொடுக்கிறார் நிக். நோராவிடம் “இப்ப பில்லைச் சுடறதுக்குத்தான் ஒருத்தன் முயற்சி பண்ணினான். அதனால அவன் ஜெயில்ல இருந்தா தப்பிப்பான்” என்கிறார்.
அஸ்டாவுடன் உண்மைக் குற்றவாளியைத் தேடி ரோந்து செல்கிறார் நிக். படகில் ஏறி கப்பலுக்குச் சென்று, போலீஸுக்கு தெரியாமல் சோதனையிடுகிறார். ஓர் இசைக் குறிப்பின் பின்னால் ஆல் அம்பாய்க்கு 12 ஆயிரம் டாலரை ட்ரேக் செட்டில் செய்ததாக எழுதப் பட்டிருக்கிறது. அங்கு ரிகர்சலில் இருக்கும் கிளிங்கருடன் நட்பாகி, அவனுடன் ஹாலிஸைத் தேடுகிறார்.
ட்ரேக்கை கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கி, 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. டேவிட் ஏகப்பட்ட பழைய பொருட்களை மியூசியத்துக்கு கொடுத்திருக்கிறார். நிக், நோராவுடன் டேவிட் வீட்டுக்குச் சென்று விசாரிக்கிறார். அப்போது ஜேனட்டுக்கு டெலிஃபோன் வர, அவசரமாகக் கிளம்பு
கிறாள். ஒரு டாக்சியில் ஜேனட்டை தொடர்கிறார் நிக்.
ஃபிரானின் வீட்டுக்கு வருகிறாள் ஜேனட். ஃபிரான் இறந்து கிடக்கிறாள். “அடிக்கடி எங்கோ நடந்து போய் வருவாள்” என்று மானேஜர் சொன்ன டைமிங்கை வைத்து, பார்வையாளர் நேரம் என்று யூகித்த நிக், பத்துநிமிட நடை தூரத்திலுள்ள ‘வேலி ரெஸ்ட் ஹோம்’ மனநல காப்பகத்துக்கு கிளிங்கர் மற்றும் நோராவுடன் வருகிறார். அங்கு ஹாலிஸ் சிகிச்சையில் இருக்கிறான். எதற்கெடுத்தாலும் பயப்படும் அவனிடம் விசாரிக்க முடியவில்லை.
சீட்டு விளையாடும்போது அஸ்டாவின் கண்ணை நோரா கர்ச்சீப்பால் துடைக்கிறாள். அது ஜேனட்டின் கர்ச்சீப். ஃபிரான் இறந்த இடத்தில் கிடந்ததாகச் சொல்கிறாள். நிக் இரவெல்லாம் ட்ரேக் மற்றும் ஃபிரான் மரணம் பற்றியே யோசிக்கிறார். வழக்கம்போல இதிலும் கூட்டத்தைக் கூட்டி கிளைமாக்ஸ். ஹாலிஸின் இசை நிகழ்ச்சி அதே கப்பலில் நடக்கிறது.
தாயர் குடும்பம், ஆல் அம்பாய் மற்றும் மனைவி, ஜேனட், பில், டால்பின், மிஸஸ் டால்பின் என்று வருபவர்களை நிக் கைகாட்டும் இருக்கைகளில் பேரர்கள் அமர வைக்கிறார்கள். மிஸஸ் ஆல் அம்பாயின் கழுத்தில் உள்ள நெக்லெஸ் சற்றுநேரத்தில் மிஸஸ் டால்பின் கழுத்துக்குச் சென்று விடுகிறது.
நிக்கும், நோராவும் ஆடிக்கொண்டே டால்பினின் டேபிளுக்கு செல்கிறார்கள். நிக், “ட்ரேக் கடனை செட்டில் பண்ணிவிட்டீர்களா?” என்று கேட்க, மிஸஸ் டால்பின், “நான்தான் ட்ரேக் கடனுக்காக நெக்லெஸ் கொடுத்தேன். இப்ப வாங்கிட்டேன்” என்கிறாள். குழுவினருடன் இசைக்கச்சேரியை ஆரம்பிக்கிறான் ஹாலிஸ்.
நிக் அவனருகில் சென்று “ட்ரேக்கை கொன்றது, ஃபிரானை கொன்றது யாருன்னு என்கிட்டயும், போலீஸ்கிட்டயும் சொல்லிட்ட, அதேபோல இவங்ககிட்டயும் சொல்லு” என்று தூண்டிவிட, “நானே சொல்றேன்” என கொலைகாரன் துப்பாக்கியுடன் எழுகிறான்.
“ட்ரேக் என் மனைவியை அபகரிக்கப் பாத்தான். அதான் கொன்னேன்” என்று சொல்லி முடிக்குமுன், டொப்! துப்பாக்கி சூடு. “முதல்ல பில்தான் ட்ரேக்கை கொன் னுருப்பான்னு நினைச்சு சார்லஸ் அபார்ட்மென்ட்ல, பில்லை சுட்டேன். இப்பதான் நீன்னு தெரிஞ்சுது” என்று காதலனைக் கொன்ற கணவனை, மனைவியே சுட்டுக் கொல்கிறாள்.
‘தின்மேன்’ தொடரின் வழக்கப்படி முற்றிலும் எதிர்பாராத நபர் குற்றவாளி ஆகிறார். ‘தின்மேன்’ தொடரின் சிறப்பம்சமே சஸ்பென்ஸ் அளவுக்கு காமெடியும் நிறைந்தி ருப்பதுதான். நிக் - நோரா தம்பதியரின் கெமிஸ்ட்ரி, கூரிய உளவுத்திறன், அஸ் டாவின் குறும்பு, ஒரே இடத்தில் நடக்கும் கிளைமாக்ஸ், தனித்தன்மையுடன் உலவும் துணைக் கதாபாத்திரங்கள் மூன்று தலைமுறைகளாக பார்வையாளர் களைக் கவர்ந்து வருகின்றன.
படத்தின் இதயமே இசை(டேவிட் ஸ்னெல்)தான். கடன், ஏமாற்றம், கொலை, கதையின் மையமாக இசைக்கலைஞர்களின் பின்னணி இருப்பதால் ஜாஸ் இசையும், கிளாரினெட் மெலடியும் இதயத்தை வருடவும், அதிரவும் வைக்கின்றன. டேஷியல் ஹேம்மெட்டின் கதாபாத்திரங்களை வைத்து, ஸ்டேன்லி ராபர்ட்ஸ் கதை எழுத, ஸ்டீவ் ஃபிஷரும், நாட் பெரினும் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.
‘ஜீன் ருகியோரோ’வின் எடிட்டிங்கில் விறுவிறுப்பு. ரொம்பவே நறுக்கிவிட்டாரோ என்னும் அளவுக்கு படத்தின் நீளம் 83 நிமிடங்கள்தான். எட்வர்ட் பஸ்ஸலின் நேர்த்தியான இயக்கமும், கப்பல், கிளப், இசைக் கச்சேரிகளில் எம்ஜிஎம் தயாரிப்பின் பிரம்மாண்டமும், சார்லஸ் ரோஷரின் ஒளிப்பதிவில் காட்சிகளின் அழகியலும் தெரிகிறது. அனைத்து பாகங்களிலும் இடம்பெற்ற அஸ்டாவின் பெயர் ஏனோ இம்முறை டைட்டிலில் இல்லை.
கிளாசிக் குற்றப் படங்கள் வரிசையில் ‘தின்மேன்’ தொடருக்குத் தனி இடம் உண்டு. 6 பாகங்களாக வெளிவந்த இந்த சீரிஸ் படங்கள் இத்துடன் முடிவு பெற்றன. அடுத்த வாரம் வேறு படத்துடன் சந்திப்போம்.
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com
முந்தைய அத்தியாயம் > த தின் மேன் கோஸ் ஹோம்- 1944: ஓவியத்தில் ஒற்று ரகசியம் | ஹாலிவுட் மேட்னி 6