ஹாலிவுட்

‘கேஸ்லைட்’ - 1944: மனவியல் சொல்லாக மாறிய திரைப்பட தலைப்பு | ஹாலிவுட் மேட்னி 28

ராம்குமார் சுப்பாராமன்

வெளிச்​சத்தை மங்​கச் செய்​து, ஒரு பெண்​ணைப் பைத்​தி​ய​மாக்கி அவளது வாழ்க்​கை​யை​யும் வைரத்​தை​யும் அபகரிக்க முயலும் கணவனை, உளவியல் பாணி​யில் வீழ்த்​தும் மனை​வி​யின் கதை ‘கேஸ்​லைட்’ (GAS LIGHT 1944).

1875-ம் ஆண்​டு, லண்​டனின் தார்ன்​டன் சதுக்​கம். தெரு​வில் கேஸ் விளக்​கு​கள் ஏற்​றப்​படும் வேளை​யில், புகழ்​பெற்ற பாடகி ஆலிஸ் அல்​கு​விஸ்ட் மர்​ம​மாகக் கொல்​லப்​பட்ட செய்தி பரவு​கிறது. அவரது வாரி​சான சிறுமி பவுலா, அத்தையின் மரணத்​துக்​குப் பிறகு இத்​தாலிக்கு இசை கற்க அனுப்​பப்​படு​கிறாள்.

பத்து ஆண்​டு​கள் கழித்து கிரி​கோரி ஆண்​டனை மணக்​கும் பவுலா, ஐரோப்​பாவிலேயே வாழ விரும்​பி​னாலும், கணவனின் வற்​புறுத்​தலால் அத்தை கொல்​லப்பட்ட அதே லண்​டன் வீட்​டுக்​குத் திரும்​பு​கிறாள். வீட்​டின் பழைய பொருட்​கள் அனைத்​தும் ஆலிஸின் நினை​வு​களைக் கிளறுகின்​றன.

அங்கு கிடைக்​கும் அத்​தை​யின் கடிதத்​தை​யும் கிரி​கோரி பிடுங்​கிக் கொண்​டு, பழைய நினை​வு​களை மறக்​கச் சொல்​கிறான். எலிசபெத் என்ற வயதான சமையல்​காரி, நான்சி என்ற இளம் வேலைக்​காரி ஆகியோரை வேலைக்கு வைத்​து, பல சம்​பவங்​கள் மூலம் பவுலா​வையே சந்​தேகப்​படும்​படி சூழ்​நிலைகளை உரு​வாக்​கு​கிறான்.

மியூசி​யத்​துக்​குச் செல்​லும்​போது கிரி​கோரி கொடுத்த குடும்ப மோதிரம் காணா​மல் போகிறது. சுவரிலிருந்த புகைப்​பட​மும் மறைந்து மீண்​டும் கிடைப்​ப​தால் பவுலா, தனக்கு மறதி நோய் இருக்​கிறதோ? என குழம்​பு​கிறாள்.

ஒவ்​வொரு இரவும் கிரி​கோரி வேலை விஷய​மாக வெளியே செல்​வ​தாகச் சொல்​லிச் செல்​கிறான். அவன் சென்​றதும் வீட்​டில் இருக்​கும் கேஸ் விளக்​கு​கள் மங்​கு​கின்​றன. மாடி​யில் யாரோ நடக்​கும் சத்​த​மும், அலமாரி​களைத் தேடும் சத்​த​மும் பவுலா​வுக்​குத் தெளி​வாகக் கேட்​கிறது.

இதைப் பற்றி அவள் கிரி​கோரியிடம் சொன்​னால், “இவை எல்​லாம் உன் பிரமை; உன் தாயைப் போலவே நீயும் பைத்​தி​ய​மாகிக் கொண்​டிருக்​கிறாய்” என்று கூறி அவளை அச்​சுறுத்​துகிறான். ஓர் இசை நிகழ்ச்​சிக்கு வந்த அழைப்​பை​யும் பவுலா​வுக்​குத் தெரி​யாமலேயே கிரி​கோரி நிராகரிக்​கிறான்.

பவுலா பிடி​வாதம் பிடித்​துச் செல்​லும்​போது, அங்கே திட்​ட​மிட்​டுத் தனது கைக்​கடி​காரத்​தைத் திருடி அவளது பையிலேயே போட்​டு​விடு​கிறான். மக்​கள் முன்​னிலை​யில் அவமானப்​பட்டு அழுது​கொண்டே வெளி​யேறும் பவுலா, “நான் உண்​மை​யிலேயே பைத்​தி​ய​மாகி​விட்​டே​னா?” என்று நம்​பத் தொடங்​கு​கிறாள்.

அந்த வீட்​டில் நடக்​கும் மர்​மங்​களைக் கவனிக்​கும் துப்​பறி​யும் அதி​காரி பிரையன், ஆலிஸின் கொலை வழக்கை மீண்​டும் விசா​ரிக்​கிறார். உண்​மை​யில் கிரி​கோரி வெளியே செல்​ல​வில்​லை; அத்​தை​யின் வைரங்​களைத் தேடி ரகசி​ய​மாக மாடி அறைக்​குச் செல்​கிறான்.

அவன் மாடி​யில் விளக்கை ஏற்​றும்​போது​தான் கீழே பவுலா​வின் அறை​யில் கேஸ் விளக்கு மங்​கு​கிறது. அத்​தையைக் கொன்ற சர்​ஜிஸ் பாயர்​தான் இப்​போது கிரி​கோரி என்ற பெயரில் பவுலாவை மணந்​திருக்​கிறான் என்​ப​தைப் பிரையன் நிரூபிக்​கிறார்.

வைரங்​களைக் கண்​டு​பிடிக்​கும் கிரி​கோரியை அவர் கையும் களவு​மாகப் பிடிக்​கிறார். இறு​தி​யில், கட்​டப்​பட்ட நிலை​யில் இருக்​கும் கிரி​கோரி ஒரு கத்​தி​யைக் காட்​டித் தன் கட்​டு​களை அவிழ்க்​கு​மாறு பவுலா​விடம் கெஞ்​சுகிறான்.

ஆனால் பவுலா​வோ, “நான் பைத்​தி​யம் அல்​ல​வா? எனக்கு இந்​தக் கத்தி எங்கே இருக்​கிறது என்று தெரிய​வில்​லை​யே!” என்று அவனது பாணி​யிலேயே நக்​கலாகப் பதிலடி கொடுத்​து, அவனைச் சட்​டத்​திடம் ஒப்​படைக்​கிறாள்.

ஒரு வீட்​டின் 4 சுவர்​களுக்​குள் நடக்​கும் போர், உலகப் போரைக் காட்​டிலும் கொடிய​தாக இருக்க முடி​யும் என்​பதை 1944-ல் வெளி​யான ‘கேஸ்லைட்’ நிரூபித்​தது. ‘பெண்​களின் இயக்​குநர்’ என்று போற்​றப்​படும் ஜார்ஜ் கியூக்​கர், ஒரு பெண்​ணின் நம்​பிக்​கை​யைச் சிதைக்​கும் உளவியல் வன்​முறையை நுணுக்​க​மான சைக்​காலஜிக்​கல் க்ரைம் த்ரில்​ல​ராக செதுக்​கி​யுள்​ளார்.

பேட்​ரிக் ஹாமில்​டனின் அசாத்​தி​ய​மான மூலக்​கதையை, ஜான் வான் ட்ரூடன், வால்​டர் ரீச், ஜான் எல்​.​பால்​டர்​ஸ்​டன் உள்​ளிட்ட திரைக்​கதை ஆசிரியர்​கள் தீவிர​மான உளவியல் போர்க்​கள​மாக மாற்​றி​யுள்​ளனர்.

ஒளிப்​ப​திவு (ஜோசப் ரூட்​டன்​பெர்க்): நிழல்​களை​யும் ஒளியை​யும் ஆயுத​மாக்​கிப் பயத்தை உரு​வாக்​கு​கிறார். குறிப்​பாக கேஸ் விளக்​கு​கள் மங்​கும் காட்​சிகளில் பயன்​படுத்​தப்​பட்ட லோ-கீ லைட்​டிங் முறை இப்​படத்​தின் உயிர்​நாடி.

எடிட்​டிங் (ரால்ப் வின்​டர்​ஸ்): கிரி​கோரி​யின் பொய்​களுக்கு எதி​ராகப் பவுலா​வின் முகத்​தில் தோன்​றும் அதிர்ச்​சி​யைத் துல்​லிய​மாகப் பதிவு செய்​யும் ‘ரி​யாக் ஷன் ஷாட்​கள்’ பார்​வை​யாளர்​களை நேரடி​யாக அவளது மனநிலைக்கு இழுத்​துச் செல்​கின்​றன.

இசை (பி​ரானிஸ்​லாவ் கேப்​பர்): மவுனத்​துக்​கும் ஒலிக்​கும் இடை​யில் பதற்​றத்தை உரு​வாக்​கும் மெது​வான பின்​னணி இசை, கதை​யின் உளவியல் அச்​சத்தை மேலும் தீவிரப்​படுத்​துகிறது.

இன்​கிரிட் பெர்க்​மன் (பவுலா): பயம், குழப்​பம், மனச்​சிதைவு போன்ற உளவியல் மாற்​றங்​களை மிக நுட்​ப​மாக வெளிப்​படுத்​திய அற்​புத​மான நடிப்​பு. அழகான முகத்​தில் மெல்ல படரும் சோகம், பயம், மனப் பிறழ்வு ஆகிய உணர்​வு​கள் பார்​வை​யாளர்​களை​யும் அவளது துயரத்​தில் இழுத்​துச் செல்​கின்​றன. இந்​தப் படத்​துக்கு அவர் ஆஸ்​கர் விருதை​யும் பெற்​றார்.

சார்​லஸ் போயர்: ஹாலிவுட் ரொமான்​டிக் ஹீரோ​வான இவர் தனது வசீகர​மான முகத்​தையே முகமூடி​யாக மாற்​றி, அதன் பின்​னால் இருக்​கும் கொடூர​மான வில்​லத்​தனத்தை வெளிப்​படுத்​துகிறார்.

ஏஞ்​சலா லான்​ஸ்​பரி மற்​றும் ஜோசப் காட்​டன்: முறையே வஞ்​சக​மான வேலைக்​காரி​யாக​வும் நம்​பிக்​கை​யான அதி​காரி​யாக​வும் கதை​யின் ஓட்​டத்​துக்கு பலம் சேர்த்​துள்​ளனர்.

7 பிரிவு​களில் அகாடமி விருதுகளுக்​குப் பரிந்​துரைக்​கப்​பட்ட இப்​படம், சிறந்த நடிகை மற்​றும் சிறந்த தயாரிப்பு வடிவ​மைப்பு ஆகிய 2 பிரிவு​களில் விருதுகளை வென்​றது.

வில்​லன், கேஸ் விளக்​கு​களை மங்​கச் செய்து அதை நாயகி​யின் பிரமை என்று நம்ப வைக்​கும் இந்த உளவியல் ஏமாற்று முறையைத்​தான் பின்​னாளில் “Gaslighting” என்று அழைக்​கத் தொடங்​கினர்.

ஒரு திரைப்​படத்​தின் தலைப்பு உலகளா​விய மனவியல் சொல்​லாக மாறியது சினிமா வரலாற்​றில் அபூர்​வ​மான சம்​பவம். ரத்​தம் சிந்​தும் கொலைகளை விட, மனித மனதை மெது​வாகச் சிதைக்​கும் ‘கேஸ்​லைட்​டிங்’ எவ்​வளவு கொடுமை​யானது என்​பதை உணர்த்​தும்​ இந்​தப்​ படத்​தை, வீட்​டின்​ வெளிச்​சத்​தைக்​ குறைத்​து மங்​கிய இருளில்​ ரசித்​துப்​ பார்க்​கலாம்​.

(செவ்​வாய்​தோறும்​ படம்​ பார்ப்போம்)

- ramkumaraundipatty@gmail.com

SCROLL FOR NEXT