குடிசைப் பகுதி சிறுவனாகச் சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்கிறவன், கேங்க்ஸ்டராகத் திரும்பி வந்து, அதே பகுதி சிறுவர்களை கெடுக்க நினைக்கிறான். அவனை, பால்ய சினேகிதன் சுட்டுக் கொல்வதே ‘டெட் எண்ட்’ (DEAD END -1937) திரைப்படத்தின் ஒருவரிக்கதை.
நியூயார்க்கின் கிழக்கு நதிக்கரையில், ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் கீழே இருக்கும் அசுத்தமான குடிசைப் பகுதியில் வறுமையில் உழலும் டாமி தலைமையிலான சிறுவர்கள், புதிதாக வரும் சிறுவனை அடித்துப் பணம் பறிக்க, டாமியின் அக்காவும் தொழிலாளர் போராளியுமான டிரீனா அதைத் தடுத்துப் பணத்தை மீட்கிறாள்.
சண்டையை வேடிக்கை பார்க்கும் ஒருவனைத் திட்டிவிட்டுச் செல்கிறாள். ஆனால் அந்த நபர், அதே பகுதியில் வளர்ந்து, 8 கொலைகளுக்காகத் தேடப்படும் கேங்க்ஸ்டர் ‘பேபி ஃபேஸ்’ மார்ட்டின் என்பது அவளுக்குத் தெரியாது.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு தன் தாய் மற்றும் பழைய காதலி ஃபிரான்சியைக் காண அவன் அங்கு வந்திருக்கிறான். தன் பால்ய நண்பனும் ஏழை ஆர்க்கிடெக்ட்டுமான டேவைச் சந்திக்கும் மார்ட்டின், அவனது வறுமையைக் கேலி செய்வதோடு, குடிசைப் பகுதி சிறுவர்களுக்குக் கத்தியைக் கையாளும் தந்திரங்களையும் கற்றுக் கொடுக்கிறான்.
டேவை, டிரீனா ஒருதலையாகக் காதலிக்கிறாள், அவனோ, ஒரு பணக்காரனைத் திருமணம் செய்துகொள்ளப் போகும் கே பர்டனுடன் சுற்றி வருகிறான்.
இதற்கிடையில், மார்ட்டின், தான் ஆசையாகப் பார்க்க வந்த தன் தாயைச் சந்திக்கிறான்; ஆனால், “நீ என் மகனே இல்லை; கொலையாளி, இங்கிருந்து ஓடிவிடு” என்று அவன் முகத்தில் அறைகிறார் தாய்.
தன் சிறுவயதுக் காதலி ஃபிரான்சி வறுமையின் கொடுமையால் பாலியல் தொழிலாளியாக மாறி, நோயுற்றுச் சீரழிந்திருப்பதை அறிந்து, அவளுக்குச் சில டாலர்களைக் கொடுத்துவிட்டுத் தன் பாசம், காதல் அனைத்தும் வறுமையால் சிதைந்துவிட்டதை உணர்ந்து மனதளவில் உடைந்துபோகிறான்.
அன்று மதியம், டாமியின் கேங்க், பணக்காரச் சிறுவன் பிலிப்பின் கடிகாரத்தைப் பறிக்க, அதைத் தடுக்க வரும் அவனது தந்தை கிரிஸ்வோல்ட்டை கத்தியால் குத்திவிட்டுத் தப்புகிறான் டாமி.
நீதிபதியின் சகோதரரான கிரிஸ்வோல்ட் போலீஸாரிடம் டாமியைப் பிடிக்க கூறுவதைக் கவனிக்கும் மார்ட்டின், தன் ஏமாற்ற விரக்தியால் அந்தப் பணக்காரச் சிறுவனைக் கடத்திப் பணம் பறிக்கத் திட்டம் தீட்டுகிறான்.
இத்திட்டத்தைத் தற்செயலாக அறியும் டேவ், அதைத் தடுக்க முயல, இருவருக்கும் இடையே நடக்கும் மோதலில் தப்பியோடும் மார்ட்டினை டேவ் சுட்டுக் கொல்கிறான். தேடப்படும் குற்றவாளியை வீழ்த்திய டேவுக்குப் பாராட்டுகளுடன் பரிசுத்தொகையும் கிடைக்கிறது.
போலீஸ் டாமியைத் தேடி வரும்போது டிரீனா தம்பியுடன் ஓடிவிடத் துணிகிறாள். “இப்படி ஓடினால் இவனும் மற்றொரு மார்ட்டினாகத்தான் மாறுவான்” என்று டேவ் தடுத்து நிறுத்த, டாமி சரணடைகிறான்.
கிரிஸ்வோல்ட் அவனைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப முயலும்போது குறுக்கிடும் டேவ், “அன்று இதே குடிசை பகுதியிலிருந்து சீர்திருத்தப் பள்ளிக்குச் சென்ற மார்ட்டின்தான் இன்று கேங்க்ஸ்டராகச் செத்து விழுந்தான்; உங்கள் சட்டங்கள் ஏழைகளைச் சீர்திருத்துவதில்லை, அவர்களைக் குற்றவாளிகளாக்குகின்றன!” என்று வர்க்க அரசியலைப் பேசுகிறான்.
டேவ் தன் பணக்காரக் காதலி கே-விடம் “நம் உலகங்கள் வேறு” என்று அவளைத் தவிர்த்துவிட்டு, டிரீனாவுடனேயே வாழ முடிவெடுக்கிறான். டாமி அழைத்துச் செல்லப்பட்ட பின், அந்தச் சிறுவர்கள் “சிறகுகள் முளைத்திருந்தால் இந்தச் சிறைச்சுவரை விட்டுப் பறந்திருப்போம்...” என்று சோகமாகப் பாடியபடி இருண்ட பகுதிக்குள் மறைகிறார்கள்.
அந்தப் பாடல் வரிகள் வெறும் கவிதை அல்ல — சிறகுகளே முளைக்காமல் செய்யும் சமூக அமைப்பின் மீதான அழுத்தமான குற்றச்சாட்டு என்று உணர்த்துவதுபோல் கேமரா அப்பகுதியிலிருந்து மேல்நோக்கி நகர்ந்து அடுக்குமாடி கட்டிடங்களுக்குள் மறைகிறது.
புலிட்சர் பரிசு பெற்ற சிட்னி கிங்ஸ்லியின் நாடகத்தை, தீவிர இடதுசாரி பெண் எழுத்தாளரான லிலியேன் ஹெல்மேன் கூர்மையான வர்க்கப் போராட்ட திரைக்கதையாக்க, சாமுவேல் கோல்ட்வினின் தயாரிப்பில், இதனை உயிர்ப்புள்ள உன்னத காவியமாக இயக்கிக் காட்டினார் மாபெரும் இயக்குநர் வில்லியம் வைலர்.
ஹெல்மேன் இதில், ஆடைத் தொழிற்சாலை போராளியான டிரீனா, வறுமையின் விரக்தியில் இருக்கும் ஆர்க்கிடெக்ட் டேவ், வறுமையால் சீரழிந்த ஃபிரான்சி என ஒவ்வொரு பாத்திரத்தின் வழியே வர்க்க எதார்த்தத்தை அப்பட்டமாகப் பேச வைத்தார்.
‘குற்றம் என்பது தனிமனிதப் பிரச்சினை அல்ல; அது பசியையும் வறுமையையும் உருவாக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பின் நோய்’ என்று ஹாலிவுட்டின் முகத்தில் அடித்தாற்போல் தன் திரைக்கதையின் மூலம் அழுத்தமாக எழுதினார்.
கலை இயக்குநர் ரிச்சர்ட் டே, குறுகிய தெருக்கள், இருண்ட சந்துக்கள், ஏழைக் குடியிருப்புகளையும், அவற்றின் அருகிலேயே ஒளிரும் செல்வந்தர்களின் மாளிகைகளையும் ஸ்டூடியோவுக்குள் உயிரோட்டமாக உருவாக்கினார்.
புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் கிரெக் டோலண்ட் ஒளியும் நிழலும் கலந்த ‘சியாரோஸ்குரோ’ (Chiaroscuro) பாணியை இதில் நேர்த்தியாகப் பயன்படுத்திக் குடிசைப் பகுதியின் இருளையும், பணக்காரர்களின் ஒளிரும் மாளிகையையும் மிகத் துல்லியமாகக் காட்டியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் டேனியல் மாண்டெல், தெருவில் ஏழைப் பெண் பசியால் பன் திருடுவதையும், மாடியில் பணக்காரச் சிறுவன் பூந்தொட்டியில் பாலை ஊற்றி வீணாக்குவதையும் அடுத்தடுத்து வெட்டி, வர்க்கக் கோபத்தைக் காட்சி ரீதியாகக் கடத்தியிருக்கிறார்.
ஆல்ஃப்ரெட் நியூமேனின் இசை குடிசைப் பகுதியின் சோகத்தையும் வறிய நிலையை உணர்த்தும் பின்னணியாக மட்டுமே கச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேடை நாடகத்தில் நடித்த அதே சிறுவர்கள் திரைப்படத்திலும் தங்களின் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி, சமூகச் சிதைவுகளின் குறியீடுகளாக வாழ்ந்துள்ளனர்.
ஜோயல் மெக்ரே: பொருளாதார மந்தநிலையிலும் நம்பிக்கையிழக்காமல், சமூகப் பொறுப்புடன் வாழும் ஆர்க்கிடெக்ட் டேவ் பாத்திரத்தில் நேர்த்தியாக நடித்துள்ளார்.
ஹம்ப்ரி போகார்ட்: 8 கொலைகள் செய்த தேடப்படும் கேங்க்ஸ்டராக, தன் கடந்த காலப் பாசத்தைத் தேடிவந்து ஏமாறும் மார்ட்டின் பாத்திரத்தில், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சில்வியா சிட்னி (டிரீனா): தம்பியின் எதிர்காலத்துக்காகவும் தொழிலாளர் உரிமைக்காகவும் போராடும் அதேவேளையில், டேவ் மீதான காதலையும், தன் எதார்த்த நடிப்பால் கண்முன்னே நிறுத்துகிறார்.
வென்டி பார்ரி (கே பர்டன்): வறுமைக்கு அஞ்சி பணக்காரனின் பாதுகாப்பை ஏற்றுக் கொண்டவள். டேவிடம் அவள் காண்பது காதல் அல்ல, உயிர்வாழ்வின் உடன்படிக்கை மட்டுமே.
கிளையர் ட்ரெவர் (ஃபிரென்சி): நோயுற்றுச் சீரழிந்த பாலியல் தொழிலாளியாக ஒரே ஒரு காட்சியில் வந்தாலும், தன் கண்கள் மூலம் பார்வையாளர்களின் மனதில் அழியாத காயத்தைப் பதித்துச் செல்கிறார்.
குற்றவாளிகளை வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமே அணுகும் வழக்கமான வணிகக் குற்றப் படங்களுக்கு மத்தியில், ‘வறுமையும் சமூகக் கட்டமைப்பும்தான் குற்றவாளிகளைப் பெற்றெடுக்கின்றன; குடிசைப் பகுதியின் இருள் சூழ்ந்த ‘டெட் எண்ட்’ (முட்டுச்சந்து) என்பது வெறும் புவியியல் எல்லை அல்ல; அது ஏழைகளின் வாழ்வை முடக்கும் முதலாளித்துவத்தின் வேலி’ என்பதை உரக்கப் பேசிய உன்னதப் படைப்பான இத்திரைப்படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.
(செவ்வாய் தோறும் படம் பார்க்கலாம்)
- ramkumaraundipatty@gmail.com