சார்லஸ் ஃபாஸ்டர் கேன் என்ற பத்திரிகை அதிபர், இறக்கும் தருவாயில் உச்சரித்த ‘ரோஸ்பட்’ என்ற சொல்லின் மர்மத்தைக் கண்டறிய செய்தியாளர் ஒருவர் மேற்கொள்ளும் விசாரணையில், அவருடைய இழப்புகளும் ரகசியங்களும் வெளிப்படுவதே ‘சிட்டிசன் கேன்’ (Citizen Kane - 1941) படத்தின் ஒருவரிக் கதை.
‘அத்துமீறல் கூடாது’ என்ற எச்சரிக்கைப் பலகை தொங்கும், இரும்புக் கதவுடன் படம் தொடங்குகிறது. இருள் சூழ்ந்த பிரம்மாண்டமான மாளிகையின் படுக்கையறையில் ‘ரோஸ்பட்’ என உச்சரித்தபடி ஒரு முதியவரின் உயிர் பிரிகிறது. இறந்துபோனவரைப் பற்றிய சுருக்கமான செய்திப் படம் காட்டப்படுகிறது.
அமெரிக்காவின் ‘குப்லாய் கான்’ என அழைக்கப்படும் மாபெரும் பத்திரிகை அதிபர் சார்லஸ் ஃபாஸ்டர் கேன், புளோரிடாவில் தனக்காகக் கட்டிக்கொண்ட சானாடு என்ற பிரம்மாண்டமான அரண்மனை, எகிப்திய பிரமிடுகளுக்குப் பிறகு ஒரு மாபெரும் கல்லறையாகத் திகழ்கிறது. பத்து அருங்காட்சியகங்களை நிரப்பும் கலைப்பொருட்கள், நோவாவின் பேழைக்குப் பிறகு உலகிலேயே அதிக விலங்குகளைக் கொண்ட மிருகக்காட்சி சாலை, 37 செய்தித்தாள்கள், வானொலி நிறுவனங்கள், காகித ஆலைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், கப்பல் நிறுவனங்கள் என 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த அவரது சாம்ராஜ்யம் பிரம்மாண்டமான இறுதிச் சடங்குடன் முடிவுக்கு வருகிறது.
இந்தச் செய்திகளைத் தொகுக்கும் ‘நியூஸ் ஆன் தி மார்ச்’ செய்தி நிறுவனம், அவர் இறக்கும்போது உதிர்த்த ‘ரோஸ்பட்’ என்ற சொல்லின் மர்மத்தைக் கண்டறிவதற்காக தாம்சன் என்ற செய்தியாளரைக் களமிறக்குகிறது.
கேனின் முன்னாள் பாதுகாவலரான வால்டர் பி. தாட்சரின் குறிப்புகளைப் படிக்கிறார் தாம்சன். கேனின் தாயார் மேரிக்கு எதிர்பாராதவிதமாக குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு சுரங்க உரிமையின் மூலம் பெரும்செல்வம் கிடைக்கிறது. சிறுவயதில் ‘ரோஸ்பட்’ என்ற பெயர் கொண்ட பனிச்சறுக்கு வண்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் கேனை தந்தையிடமிருந்து பிரித்து வங்கியாளர் வால்டர் தாட்சரிடம் ஒப்படைத்துப் படிக்க வைக்கிறார் மேரி.
தாயைப் பிரிந்து வளரும் கேன், ‘நியூயார்க் இன்குயரர்’ என்ற பத்திரிகையை வாங்குவதோடு, அதன் போட்டி நிறுவனத்தின் ஆட்களையும் விலைக்கு வாங்கி பெரும் ஊடக அதிபராக உருவெடுக்கிறார்.
கேனின் மேலாளரான பெர்ன்ஸ்டீனைச் சந்திக்கும் தாம்சன், கேன் தனது நாளிதழை எவ்வாறு வளர்த்தார் என்றும் ஊழியர்களுக்காக அவர் நடத்திய பிரம்மாண்ட கேளிக்கை விருந்துகள் குறித்தும் தெரிந்து கொள்கிறார்.
அதன்பிறகு கேனின் நெருங்கிய நண்பரான ஜெடிடியா லேலண்டைச் சந்திக்கிறார் தாம்சன். கேன், ஆளுநர் தேர்தலில் போட்டியிடும்போது, சூசன் என்ற பாடகியுடன் அவருக்கு இருக்கும் ரகசிய உறவை எதிர்க்கட்சி வேட்பாளரான ஜிம் கெட்டிஸ் அம்பலப்படுத்துகிறார்.
இந்தச் சர்ச்சை கேனின் முதல் மனைவி எமிலியுடனான உறவையும் அரசியல் வாழ்க்கையையும் சீர்குலைக்கிறது. பத்திரிகைகளில் செய்தி வெளியாக, தேர்தலில் கேன் தோல்வியடைகிறார். பிறகு, சூசனைத் திருமணம் செய்துகொள்ளும் கேன், அவளது விருப்பத்துக்கு மாறாக ஓபரா பாடகியாக்க முடிவெடுத்து, ஒரு ஓபரா மாளிகையைக் கட்டுகிறார்.
சூசன் மேடையில் கொடூரமாகப் பாடி விமர்சனங்களை எதிர்கொள்கிறாள். தொடர் அழுத்தங்களால் சூசன் தற்கொலைக்கு முயன்றபிறகே அவளுடைய பாடகி வாழ்க்கையை நிறுத்த கேன் அனுமதிக்கிறார். இருவரும் சானாடு அரண்மனையில் குடியேறுகின்றனர்.
அந்தப் பிரம்மாண்டமான தனிமையில் அடைபட்டுச் சித்திரவதையை அனுபவிக்கும் சூசன், கேனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்கிறாள். வேதனை தாளாமல், சூசனின் அறையிலுள்ள அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கும் கேன், இறுதியில் அந்தக் கண்ணாடிப் பனிப்பந்தை கையில் எடுத்ததும் அமைதியாகி ‘ரோஸ்பட்’ என்று உச்சரிக்கிறார்.
சானாடு அரண்மனையின் பணியாளரான ரேமண்ட் மூலம் கேனின் இறுதித் தருணங்களைத் தெரிந்துகொள்ளும் தாம்சன், ‘ரோஸ்பட்’ என்பது கேனின் வாழ்க்கைப் புதிரில் விடுபட்ட ஒரு துண்டாக இருக்கலாம் என்று கருதினாலும் அந்தச் சொல்லின் உண்மையான பொருளைக் கண்டறிய முடியாமல் அங்கிருந்து விடைபெறுகிறார்.
அரண்மனையில் உள்ள தேவையற்ற குப்பைகளை வேலையாட்கள் தீயிலிட்டு எரிக்கும்போது, அதில் சிறுவயதில் கேன் விளையாடிய ரோஸ்பட் என்று பெயர் பொறிக்கப்பட்ட பனிச்சறுக்கு வண்டியும் எரிய, கேனின் வாழ்க்கையின் மறைக்கப்பட்ட மர்மம் பார்வையாளர்களுக்கு வெளிப்படுகிறது.
உலகத்தையே வெல்ல நினைத்த மனிதன், தனது வாழ்க்கையின் தொடக்கத்தில் இழந்த ஒன்றை மீண்டும் பெற முடியாமல் இறந்து விடுகிறான். அதுவே ‘சிட்டிசன் கேன்’ திரைப்படத்தின் நிலைத்திருக்கும் மர்மத்தின் உணர்ச்சிகரமான பொருளாகும்.
நிஜ ஊடக அதிபர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தக் கதையை ஆர்சன் வெல்ஸும் ஹெர்மன் ஜே. மான்கிவிச்சும் இணைந்து திரைக்கதை அமைத்து சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றனர். தனது முதல் படத்திலேயே இயக்கத்தோடு சேர்த்து சிறந்த நடிப்பையும் வழங்கியிருக்கிறார் ஆர்சன் வெல்ஸ்.
ஒளிப்பதிவாளர் கிரெக் டோலண்டுடன் இணைந்து ‘டீப் ஃபோகஸ்’ என்ற ஒளிப்பதிவு உத்தியை திறம்பட பயன்படுத்தினார். திரையின் முன்வரிசையில் உள்ள கதாபாத்திரங்களும், பின்னணியில் வெகு தொலைவில் நடக்கும் நிகழ்வுகளும் ஒரே நேரத்தில் தெளிவாகத் தெரியும்படி அமைக்கப்பட்ட இந்த உத்தி, தனித்துவமான கதை சொல்லும் முறைக்குப் பெரிதும் உதவியது.
கதை முன்னும் பின்னுமாக மாறி மாறிப் பயணித்தாலும், எவ்விதக் குழப்பமும் ஏற்படாதவாறு ஏகப்பட்ட ‘டிசால்வ் ஷாட்களைப்’ பயன்படுத்தி, படத்தொகுப் பாளர் ராபர்ட் வைஸ் மிகவும் நேர்த்தியாகத் தொகுத்திருந்தார். படத்தொகுப்போடு இசைந்து பெர்னார்ட் ஹெர்மனின் இசையும் கதைக்கு அபாரமான விறுவிறுப்பைக் கூட்டியுள்ளது.
வானொலி நாடகங்கள் மூலமாகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்தவர் என்பதால், ஆர்சன் வெல்ஸ் இப்படத்தில் ஒலி வடிவமைப்பை மிகத் துல்லியமாகக் கையாண்டுள்ளார். படத்தின் மொத்தக் கதையுமே, இறக்கும் தருவாயில் அவர் உச்சரிக்கும் ‘ரோஸ்பட்’ என்ற அந்த மிகச் சிறிய ஒலிக் குறிப்பில்தான் அடங்கியிருக்கிறது. 25 வயது இளைஞரான ஆர்சன் வெல்ஸ், இளைஞன் முதல் 76 வயது முதியவராக இறக்கும் தருணம் வரையிலும் அந்தந்தக் காலகட்டத்துக்கு ஏற்றவாறு மேக்கப் மூலம் உருவத்தை மாற்றி நடிப்பின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
சேற்றுடன் நிற்கும் கேனைப் பார்த்து உதவும் சாதாரணப் பெண்ணாக அறிமுகமாகும் சூசன், பின்னர் ஓபரா பாடகியாகித் தவிப்பதும், இறுதியில் கேனை விட்டு விலகிச் செல்வதுமாக அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார் டோரதி கமிங்கோர்.
கேனின் நெருங்கிய நண்பராக வரும் ஜெடிடியா லேலண்ட் கதாபாத்திரத்தில் ஜோசப் காட்டனும் இளமை மற்றும் முதுமை தோற்றங்களில் வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார்.
அரசியல் மேடையில் கேன் கொடுக்கும் வாக்குறுதிகளையும், எதிர்க்கட்சித் தலைவரை சிறைக்கு அனுப்புவேன் என்ற அவரது எச்சரிக்கைப் பேச்சையும் இப்போதைய சூழலிலும் பொருத்திப் பார்க்கலாம். வெளியான காலத்தில் சர்ச்சைகளையும் வணிகத் தடைகளையும் சந்தித்த இப்படம், பின்னாளில் உலகத்
திரைப்பட வரலாற்றின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக உயர்ந்தது.
எழுத்து, நடிப்பு, இயக்கம் மற்றும் தொழில்நுட்பம் என இப்போது பார்த்தாலும் பிரமிப்பை ஏற்படுத்தும் இந்த ‘சிட்டிசன் கேனை’ சினிமாவை நேசிக்கும் அனைவரும் தவறவிடாமல் பார்த்து மகிழலாம்!
(செவ்வாய்தோறும் படம் பார்க்கலாம்)