லண்டன்: ஆஸ்கர் விருது பெற்ற ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி ஒடிசி’ படத்தின் புதிய ட்ரைலர் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இம்மாதம் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் டாம் ஹாலண்ட், மேட் டேமன், ஸெண்டாயா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 2026-ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இது திகழ்ந்த போதிலும், யூடியூபில் இதன் ட்ரைலருக்கு லைக்குகளை விட டிஸ்லைக்குகள்அதிகமாகக் குவிந்து வருவது படக்குழு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த நோலன் படமும் இவ்வளவு வெறுப்பை சம்பாதித்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு இப்படம் ரிலீஸுக்கு முன்பே இணையத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
ஹோமரின் புகழ்பெற்ற பண்டைய கிரேக்க இதிகாச கதையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அசல் தன்மையை எதிர்பார்த்து ட்ரைலரைப் பார்த்த ரசிகர்கள், அதில் கதாபாத்திரங்கள் பேசிய நவீன ஆங்கில வசனங்களும், அவர்களின் சமகால அமெரிக்க உச்சரிப்புகளும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பண்டைய வரலாற்றுக் கதைக்கு இத்தகைய நவீன மொழிநடை ஒத்துவாராமல், ஏதோ ஒரு 'ஸ்டார்பக்ஸ்' காபி ஷாப்பிற்கு வெளியே நடக்கும் உரையாடலைப் போல இருப்பதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், ட்ராய் நகரின் ஹெலன் கதாபாத்திரத்தில் கருப்பினத்தைச் சேர்ந்த லுபிடா நியாங்கோ நடித்திருப்பது உள்ளிட்ட சில முக்கியக் கதாபாத்திரங்களின் தேர்வு, வரலாற்றுத் துல்லியத்திற்கு முரணாக இருப்பதாக இணையத்தில் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தக் கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில், இது ஒரு கற்பனையான புராணக் கதை என்பதால் வரலாற்றுத் துல்லியத்தை எதிர்பார்ப்பது தவறு என்று நோலனின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
இது குறித்து திரைப்பட எழுத்தாளர் டாம் ஷோன், கிறிஸ்டோபர் நோலனை ஒரு 'ரோர்சாக் இயக்குநர்' என்று வர்ணித்துள்ளார். அதாவது அவரது படைப்புகளைப் பார்ப்பவர்கள் தங்களின் சொந்தக் கண்ணோட்டத்திற்கு ஏற்பவே வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்வார்கள் என்று அவர் விளக்கியுள்ளார். இந்த திரைப்படம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ள போதிலும், இதன் பிரம்மாண்டம் மற்றும் நடிகர் பட்டாளம் காரணமாக இந்த ஆண்டின் மிக முக்கியமானத் திரைப்படமாக இது இருக்கும் என சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.