குற்றத்தை நிரூபித்துத் தண்டனை வாங்கித் தர வேண்டிய அரசு வழக்கறிஞரே, குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை நிரபராதி என்று நிரூபிக்கப் போராடுவதே ‘பூமராங்’ (BOOMERANG -1947)படத்தின் ஒருவரிக் கதை. அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தின் பிரிட்ஜ் போர்ட் நகரில் ஒரு பனி இரவில், எல்லோராலும் நேசிக்கப்பட்ட எபிஸ்கோபல் திருச்சபையைச் சேர்ந்த ஃபாதர் லாம்பர்ட் மர்ம நபரால் அவரது பின்மண்டையில் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
ராபின்சன் தலைமையிலான போலீஸார் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரம் இந்தக் கொலை வழக்கு, ஆளுங்கட்சிக்கு எதிரான அரசியல் சர்ச்சையாக உருவெடுக்கிறது. காவல்துறையின் இயலாமையைப் பத்திரிகைகள் கேலிச்சித்திரங்கள் மூலம் பறைசாற்றுகின்றன.
கொலையாளியை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்ற அரசியல் மற்றும் பொது அழுத்தம், போலீஸ் அதிகாரி ராபின்சனையும் அரசு வழக்கறிஞர் ஹென்றி ஹார்வியையும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. இறுதியாக, கொலையாளியைப் பார்த்ததாகக் கூறப்படும் 7 சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில், பத்திரிகைகள் கொலையாளியின் உருவ வரைபடத்தை வெளியிடுகின்றன.
அந்த உருவத்தோடு அச்சு அசலாக ஒத்திருந்த முன்னாள் ராணுவ வீரரும் நாடோடியுமான ஜான் வால்ட்ரன் என்ற இளைஞன் சந்தேகத்தின் பேரில் ஒஹியோவில் கைது செய்யப்படுகிறான். அடையாள அணிவகுப்பில், சாட்சிகள் அனைவரும் ஒருமனதாக அவனையே கொலையாளி என்று கை காட்டுகின்றனர்.
அரசியல் லாபத்துக்காக சில போலீஸ் அதிகாரிகள், குற்றத்தை மறுக்கும் வால்ட்ரனை 2 நாட்கள் தொடர்ந்து சித்ரவதைக்கு உள்ளாக்குகிறார்கள். சித்ரவதையாலும் தூக்கமின்மையாலும் சோர்ந்துபோன அவன், வேறுவழியின்றி, தான் செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலத்தில் கையெழுத்திடத் தள்ளப்படுகிறான். அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட .32 ரக துப்பாக்கியே கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாகப் பலமாக நம்பப்படுகிறது.
சாட்சிகளின் அசைக்க முடியாத வாக்குமூலங்களும், சூழ்நிலை ஆதாரங்களும் அவனை மின்சார நாற்காலியில் அமர வைக்கப் போதுமானதாகத் தோன்றுகின்றன. ஹென்றி ஹார்வி, சிறையில் வால்ட்ரனை நேரடியாகச் சந்தித்துப் பேசுகிறார். சாட்சிகளையும் ஆதாரங்களையும் மீண்டும் தீர்க்கமாகப் பரிசீலிக்கிறார்.
“இந்த லாக்கப்பில் 2 நாள் இருந்தால் எவனும் தன்னை குற்றவாளியாக ஒப்புக் கொள்வான்” என்று வால்ட்ரன் சொன்ன வார்த்தை அவரை உறுத்துகிறது. உண்மையில் அவன் குற்றவாளி அல்ல என்று அவரது உள்ளுணர்வு எச்சரிக்கிறது.
குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று பத்திரிகையாளர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் என அனைவரும் காத்திருக்க, சற்றும் எதிர்பாராத திருப்பமாக, ஹார்வி இந்த வழக்கில் உள்ள அறிவியல் பூர்வமான குறைபாடுகளை நடுவர்மன்றத்துக்கு விளக்கி, வால்ட்ரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்ய விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.
திடுக்கிடும் இந்த அறிவிப்பால் மொத்தக் கூட்டமும் அதிர்ச்சியடைந்து கத்தி, கூச்சலிட்டு, தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர நீதிபதி அடுத்த நாளுக்கு வழக்கை ஒத்தி வைக்கிறார். நீதிமன்றத்துக்கு வெளியே, ஆத்திரத்தில் வால்ட்ரனை அடித்துக் கொல்ல முயலும் வெறிபிடித்த கூட்டத்தைப் போலீஸ் தலைவர் ராபின்சன் தன் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்துகிறார்.
அரசு தரப்பிலேயே நின்றுகொண்டு, குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை நிரபராதி என்று நிரூபிக்க ஹார்வி எப்படி போராடினார் என்பதே 1947-ல் வெளியாகி, ஆஸ்கர் பரிந்துரை வரை சென்ற ‘பூமராங்’ திரைப்படத்தின் மீதிக்கதை! ‘கொலையாளி யார்?’ என்ற கேள்விக்குப் பதில் தேடும் குற்றப் படங்களுக்கு மத்தியில், ‘குற்றம் சாட்டப்பட்டவன் உண்மையில் அப்பாவியா?’ என்ற கேள்வியை முன்வைக்கும் படமாக பூமராங் தனித்து நிற்கிறது.
1924-ல் கனெக்டிகட் மாநிலத்தின் பிரிட்ஜ்போர்ட் நகரில் பாதிரியார் ஹூபர்ட் தஹில் சுட்டுக்கொல்லப்பட்ட உண்மைச் சம்பவத்தையும், 1945-ல் ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழில் அந்தோணி அப்போட் எழுதிய கட்டுரையையும் அடிப்படையாகக் கொண்டு, ரிச்சர்ட் மர்பி இதை விறுவிறுப்பான திரைக்கதையாக வடிவமைத்தார்.
அந்தத் திரைக்கதை உத்தியின் உச்சமாக, நேரில் பார்த்ததாகக் கூறிய 7 பேரின் சாட்சியங்களையும் போலீஸ ஜோடித்த ஆதாரங்களையும் ஹார்வி ஒன்றன்பின் ஒன்றாக உடைக்கிறார். இறுதியில் கொலை ஆயுதமான துப்பாக்கியைத் தன் உதவியாளர் மூலம் தன்னையே நோக்கிச் சுடச் சொல்லி, அது பழுதடைந்த ஆயுதம் என்பதை நிரூபிக்கிறார்.
ஏற்கெனவே 16 முறை சோதித்துப் பார்த்த அந்தத் துப்பாக்கியை, ஓர் அப்பாவியின் உயிரைக் காப்பாற்ற நீதிமன்றத்தில் தன் உயிரையே பணயம் வைத்து மீண்டும் சோதித்துக் காட்டுகிறார். ஒட்டுமொத்த நீதிமன்றத்தையும் பதறவைக்கும் அந்த 17-வது முயற்சியில் துப்பாக்கி வெடிக்க மறுப்பதே இத்திரைக்கதையின் அசத்தலான உச்சக்கட்டம்.
பின்னாளில் ஹாலிவுட்டின் மகத்தான இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்த இலியா கசானுக்கு, ‘பூமராங்’, அவரது ஆரம்பகால முக்கிய மைல்கற்களில் ஒன்று. குற்றம் நிகழ்ந்த பிரிட்ஜ்போர்ட் நகரில் அனுமதி மறுக்கப்பட்டதால், ஸ்டேம்ஃபோர்டு நகரின் நிஜ வீதிகளையும் நீதிமன்றங்களையும் செமி-டாக்குமென்டரி பாணியில் படமாக்கி அபார யதார்த்தத்தை உருவாக்கினார். பல உள்ளூர் மக்களையும் நிஜ போலீஸ் அதிகாரிகளையும் திரையில் தோன்றச் செய்து படத்தின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தினார்.
செமி-டாக்குமென்டரி பாணியின் முன்னோடியான தயாரிப்பாளர் லூயிஸ் டி ரோஷ்மோனின் யதார்த்தமான தயாரிப்பும், கசானின் உயிரோட்டமான இயக்கமும் இணைந்து பூமராங் படத்தை காலத்தால் அழியாத நீதிமன்றக் காவியமாக மாற்றியுள்ளன.
ஒளிப்பதிவாளர் நார்பர்ட் பிரோடின், நிஜ நகரத்தின் வீதிகளையும் நீதிமன்றங்களையும் யதார்த்தத்துடன் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக நீதிமன்றக் காட்சிகளில் முகபாவனைகளையும் பதற்றத்தையும் க்ளோஸ்-அப் ஷாட்களில் பிடித்த விதம் சிறப்பு.
எடிட்டர் ஹார்மன் ஜோன்ஸ், வாய்ஸ்-ஓவரில் தொடங்கும் படத்தை விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லராகவும் வாதங்கள் நிறைந்த கோர்ட்ரூம் டிராமாவாகவும் தொய்வில்லாமல் கடத்துகிறார். இசையமைப்பாளர் டேவிட் பட்டால்ஃபின் பின்னணி இசை, போலீஸ் விசாரணை மற்றும் இறுதி வாதங்களின் போது பரபரப்பை உச்சத்துக்குக் கொண்டு செல்கிறது.
டானா ஆண்ட்ரூஸ் (ஹென்றி ஹார்வி): படத்தின் அச்சாணியான இவர், ஓர் அரசு வழக்கறிஞராகத் தன் கடமையையும் செய்து, அதே நேரம் தன் மனசாட்சிக்குத் துரோகம் செய்யாமல் நீதியைக் காப்பாற்றத் துடிக்கும் தர்மசங்கடமான நிலையைத் தன் முதிர்ச்சியான நடிப்பால் கடத்தியிருக்கிறார்; இறுதி கோர்ட் காட்சிகளில் இவரது கம்பீரமான குரலும் வாதங்களும் படத்துக்குப் பெரும் பலம்!
ஆர்தர் கென்னடி (ஜான்): செய்யாத குற்றத்துக்காகக் குற்றவாளியாக்கப்படும் அப்பாவியின் பயம், அவமானம், மனச்சிதைவை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
லீ ஜே.காப் (ராபின்சன்): நேர்மையான அதிகாரியாக இருந்தாலும் அரசியல் மற்றும் பொது அழுத்தங்களுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் போலீஸ் தலைவரின் பரிதாபகரமான நிலையைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறார்.
ஓர் அப்பாவியைக் குற்றவாளியாக மாற்றத் துடிக்கும் அமைப்புக்கும், உண்மையை நிலைநாட்டத் துடிக்கும் மனிதனின் மனசாட்சிக்கும் இடையிலான போராட்டம்தான் ‘பூமராங்’. தவறான அரசியல் அழுத்தங்களும் அவசர முடிவுகளும் ஒரு சமூகத்தையே ‘பூமராங்’ போல் எப்படித் திருப்பித் தாக்கும் என்பதை நேர்மையாகப் பதிவு செய்திருக்கும் இந்த மாஸ்டர்பீஸை நல்ல சினிமாவை நேசிக்கும் எவரும் தவறவிடக் கூடாது.
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com