கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், இசா ரே, கேட் மெக்கினன் உள்பட பலர் நடித்து 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பார்பி’.
உலக அளவில் பிரபலமான பார்பி பொம்மைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், பார்பிகளின் உலகுக்கும் உண்மையான உலகுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைப் பிரதிபலித்தது. உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற இப்படம், வார்னர் பிரதர்ஸ் வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படமாகத் திகழ்கிறது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. ஆனால், ஊதிய ஒப்பந்தச் சிக்கல்கள் காரணமாக அந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
இயக்குநர் கிரெட்டா கெர்விக், ‘பார்பி’யாக நடித்த மார்கோட் ராபி உள்ளிட்ட முக்கியக் கலைஞர்களுடன் நடைபெற்று வந்த ஊதிய பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை.
படக்குழுவினர் மிகப்பெரிய ஊதியத் தொகையைக் கேட்பதாகவும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டேவிட் ஜாஸ்லவ் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 6 முறைக்கு மேல் ஊதிய ஒப்பந்த வாய்ப்புகளை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வழங்கியதாகவும், அவற்றைப் படக்குழு நிராகரித்ததால் ‘பார்பி 2’ உருவாக வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.