உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்ற ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் மீண்டும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாக கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’. ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில், ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃப்பால்லோ, கிறிஸ் ஹோம்ஸ்வோர்த், ஸ்கார்லெட் ஜோஹான்சன், டான் செடில், ஜெர்மி ரேன்நேர் உள்பட பலர் நடித்த இப்படம், வசூலில் சாதனைப் படைத்தது.
இந்நிலையில் இதன் அடுத்த வரிசை படமான, ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ டிச.18-ல் வெளியாக இருக்கிறது. மார்வல் ஹீரோக்கள் பெரும்பாலோனோர் நடித்துள்ள இப்படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. அதன் வெளியீட்டுக்கு முன்பாக மார்வலின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தை ‘எண்ட்கேம்-என்கோர்’ என்ற பெயரில் செப். 25-ம் தேதி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இப்படம் ஐமேக்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டூடியோஸின் ‘இன்ஃபினிட்டி விஷன்’ எனும் புதிய ‘ஃபார்மட்’ திரையரங்குகளிலும் வெளியாகிறது. இதன் மூலம் பெரிய திரை, சிறப்பான ஒலி அமைப்பு என சிறந்த சினிமா அனுபவத்தை இந்த ‘இன்ஃபினிட்டி விஷன்’ வழங்குகிறது. இப்படத்துடன் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.