ஹாலிவுட்

அண்டு தென் தேர் வர் நன் (1945) - தீவு பங்களாவில் திகில் நிமிடங்கள் | ஹாலிவுட் மேட்னி 16

ராம்குமார் சுப்பாராமன்

விருந்​தினர்​களாக அழைக்​கப்​பட்​ட​வர்​கள், விநோத​மான முறை​யில் தீவு பங்​களா​வில் தீர்த்​துக் கட்​டப்​படு​வதே ‘அண்டு தென் தேர் வர் நன்’ (AND THEN THERE WERE NONE - 1945) திரைப்​படத்​தின் ஒரு​வரிக் கதை.

ஆக்​ரோஷ​மான அலைகளுக்கு நடு​வே, ஒரு படகு ஆடி அசைந்து தீவு பங்​களாவை நோக்​கிச் செல்​கிறது. அதில் ஒரு​வருக்​கொரு​வர் அறி​முகமில்​லாத டாக்​டர், ஜெனரல், டிடெக்​டிவ், நீதிப​தி, செகரட்​டரி உள்பட எட்டு பேர் பயணிக்​கிறார்​கள். அவர்​களுக்கு கடிதம் எழுதி வரவழைத்த, யு என் ஓவன் என்​பவர் இரவு வந்து விடு​வார் என்று வேலைக்​காரன் தாமஸ் சொல்​கிறான்.

அவர்​கள் தங்​கு​வதற்​குத் தனித்​தனி அறை​கள் ஒதுக்​கிக் கொடுக்​கிறான். அவனது மனைவி எதல் ரோஜர்ஸ் டின்​னர் ஏற்​பாடு செய்​கிறார்.நிகிடா ஸ்டார்​லொஃப் என்​பவர் தன்னை அறி​முகம் செய்​கிறார்.

அதற்​குப்​பின் ஒவ்​வொரு​வரும் தங்​களை அறி​முகம் செய்து கொள்​கிறார்​கள். அங்கே மேஜை​யில் ‘டென் லிட்​டில் இண்​டியன்​ஸ்’ எனப்​படு​கிற பத்து சிறு பொம்மைகள் இருக்​கின்​றன.

          

நிகிடா அங்​குள்ள பியானோ​வில் அந்த சிற்​றிந்​தி​யர்​கள் பற்​றிய பாடலை வாசிக்​கிறார். அந்​தப் பாடல் சிறு​வர்​களின் ரைம்​ஸ்​போல இருந்​தா​லும் விபரீத அர்த்​தம் கொண்​ட​து. “ஒரு​வன் மூச்​சுத் திணறி இறந்​தான். மீதி ஒன்​பது பேர்.

ஒரு​வன் அதிக நேரம் தூங்​கி​விட்​டான். மீதி எட்​டுப் பேர். ஒரு​வன் விறகு வெட்​டப் போனான். தன்​னையே வெட்​டிக்​கொண்டான். மீதி ஆறு​பேர், கடைசி ஆள், தனி​யாக இருந்​தான். தூக்​குப் போட்டு இறந்​தான். அதன் பிறகு ஒரு​வரும் இல்​லை” என்று அந்​தப்​பாடல் முடிவடைகிறது.

தாமஸ், கிராமஃ​போன் ரெகார்டை ஆன் பண்ண, அதில் ஒலிக்​கும் ஓவனின் குரல் அங்​கிருக்​கும் பத்​துப் பேர் செய்த குற்​றங்​களை​யும் சுட்​டிக் காட்​டு​கிறது. ஜெனரல் ஜான் மாண்ட்​ரேக் “அத தூக்​கிப் போடு” என்று கத்த, தாமஸ் “காலைல 9 மணிக்கு அந்த கிராமஃ​போன ஆன் பண்​ணணும்ங்​கறது ஓவனோட உத்​தர​வு” என்​கிறான்.

“யார் அந்த ஓவன்?” என்று வந்​தவர்​கள் யாருக்​கும் தெரிய​வில்​லை. “முன்​னப்​பின்ன தெரி​யா​வன் அழைச்​சதை நம்​பியா வந்​தோம்?” என்று தங்​களுக்​குள் பேசிக் கொள்​கிறார்​கள். இங்​கிருந்து தப்​பித்​துப் போகலாம் என்று முடி​வெடுக்க, தாமஸ் “படகு இல்​லாமல் தப்​பிக்க முடி​யாது. திங்​கள்​கிழமை​தான் படகு வரும். இன்று வெள்​ளிக்​கிழமை” என்​கிறான்.

“ஏன் தப்​பிச்​சுப் போக நினைக்​கிறீங்க? இந்த அட்​வெஞ்​சரை என்​ஜாய் பண்​ணுங்க. நான் தப்பு பண்​ணது உண்​மை​தான்” என்று ஒரு கிளாஸ் சரக்கு எடுத்து குடிக்​கும் நிகி​டா, மூச்​சுத் திணறி சாகிறான். அந்த பொம்​மை​யில் ஒன்று உடைந்து கிடக்​கிறது. பிறகு வேலைக்​காரி ஏதெல் ரோஜர்​ஸ், மாரடைப்​பால் தூக்​கத்​திலேயே இறந்து போகிறாள்.

பாடல் வரி​களுக்​கேற்ப மரணங்​கள் நிகழ்​கின்றன என்​பதை அனை​வரும் உணர்​கிறார்​கள். ஜெனரல் மாண்ட்​ரேக் குத்​தப்​பட்​டுச் சாகிறார். “அந்த ஓவன் வெளி​யில இல்​லை. நமக்​குள்ள ஒருத்​தன்” என்று நீதிபதி சொல்​கிறார்.

ஒரு​வரையொரு​வர் சந்​தேகப்​படு​கிறார்​கள். கண்​காணிக்​கிறார்கள். பொம்​மை​கள் உடைக்​கப்​படு​கின்​றன. எப்​போதும் ஸ்வெட்​டர் பின்​னிக் கொண்​டிருக்​கும் ஆன்ட்டி மிஸ் பிரெண்ட், ஊசி​போட்டு கொல்​லப்​படு​கிறாள். நீதிப​தி​யும் நெற்​றி​யில் துப்​பாக்கி பொட்டு வைக்​கப்​பட்டு சாகிறார்.

அந்​தப்பாடலின் வரி​களுக்​கேற்ப வரிசை​யாகக் கொல்​லப்​படு​கிறார்​கள். அனை​வரை​யும் கொன்​றது யார்? ஏன் கொல்​லப்​பட்​டார்​கள்? என்​பதை ரத்​தமின்றி அமை​தி​யான முறை​யில் காட்​டு​வதே படம். பைபிள் மற்​றும் ஷேக்​ஸ்​பியர் நாடகங்​களுக்கு அடுத்​த​படி​யாக, உலகில் அதி​கம் விற்​பனை​யான புத்​தகங்​களை எழு​தி​ய​வர், அகதாகிறிஸ்டி.

‘மர்​மக் கதைகளின் அரசி’ என்று அழைக்​கப்​படும் இவரின் பெரும்பாலான கதைகள் ஓடும் ரயில், நடுக்​கடலில் உள்ள கப்​பல் அல்​லது தனித்​தீவு என்று ஒரு குறிப்​பிட்ட இடத்​துக்​குள்ளே நடக்​கும். ‘முடிந்​தால் கண்​டு​பிடி​யுங்​கள்’ என்று பல துப்​பு​களை கதை முழு​வதும் தூவி விட்​டிருப்​பார். அப்​பாவி​களை சந்​தேகப்பட வைத்​து​ விட்​டு, யாரும் எதிர்​பார்க்​காத ஒரு​வரை குற்​ற​வாளி​யாக மாற்​று​வ​தில் இவர் வல்​ல​வர்.

இதன் தழு​வலாக தமிழில் வெளி வந்த ‘நடு இரவில்’ படத்​தில் கற்​பனை செய்தே பார்க்க முடி​யாத வி.எஸ்​.​ராகவனை வில்​ல​னாக சித்​தரித்​த​போது என்ன அதிர்ச்சி ஏற்​பட்​டதோ, அதே அதிர்ச்சி குண்​டடிபட்டு இறந்​த​தாகக் காட்​டப்​படும் நீதிப​தியை இறு​தி​யில் குற்​ற​வாளி​யாகக் காட்​டும்​போது ஏற்​படு​கிறது.

உலகிலேயே அதி​கம் மொழி​யாக்​கம் மற்​றும் தழு​வல் செய்​யப்​பட்ட கதை இது​தான். கதை​யின் மையக்​கருத்தை வைத்​துக் கொண்டு பின்​புலத்தை மட்​டும் மாற்றி ரீமேக்​காக​வும், ஃப்​ரீமேக்​காக​வும் பல மொழிகளில் எடுக்​கப்​பட்​டுள்​ளது. நாவலின் சோக முடிவை, திரைக்​கதை ஆசிரியர் டட்லி நிக்​கோல்​ஸ், மாற்றி ஹாலிவுட் ரசிகர்​களுக்​கேற்ப விறு​விறுப்​பான கிளை​மாக்ஸை அமைத்​திருக்​கிறார்.

நீதிப​தி​யாக நடித்​திருக்​கும் பாரி ஃபிட்​ஸ்​ஜெ​ரால்ட் தொடக்​கத்​தில் கண்​டிப்​பானவ​ராக​வும், இடை​யில் பயந்​தவ​ராக​வும், இறு​தி​யில் சைக்கோ கில்​ல​ராக​வும் மிரட்​டலாக நடித்​திருக்​கிறார். குடிப்​பழக்​கத்​துக்கு அடிமை​யான மருத்​து​வ​ராக, பயத்​தில் வியர்க்க விறு​விறுக்க வால்​டர் ஹஸ்​டன் படும் அவஸ்​தையை நாம் உணர்​கிறோம்.

வேலைக்​காரன் தாமஸ் (ரிச்​சர்ட் ஹேடன்) தன்​மீது சந்​தேகப்​படு​பவர்​களின் அத்​தனை சரக்​கை​யும் புலம்​பிக் கொண்டே குடிப்​பது, ஓவர் போதை​யில் அனை​வருக்​கும் பரி​மாறு​வது பரி​தாபத்தை வரவழைக்​கிறது.

லோம்​பார்ட்​டாக வரும் லூயிஸ் ஹேவர்ட் மற்​றும் வேரா கிளேதோர்​னாக வரும் ஜூன் டூப்​ரே, இரு​வரை​யும் காதலர்​கள்​போல் பழக​ வைத்​து, திடீரென ஒரு​வரையொரு​வர் சந்​தேகப்பட வைத்​து, இறு​தி​யில் அவர்​கள் மட்​டும் உயிரோடு வெளி​யேறு​வது​வரை ரசிக்​கும்​படி​யான கெமிஸ்ட்​ரி.

லூசி​யன் ஆண்ட்​ரியட்​- தன் ஒளிப்​ப​தி​வில், இருட்​டிலிருந்து நீளும் கைகள், இடி மின்​னல் வெளிச்​சத்​தில் தெரி​யும் முகங்​கள் என விஷுவல் ட்ரீட் கொடுத்​திருக்​கிறார். மரியோ காஸ்​டெல்​னுவோ – டெடெஸ்கோ வின் பின்​னணி இசை, அலற வைக்​காமல், மர்​ம​மான அமை​தி​யைக் கடத்​து​வ​தில் கவனம் செலுத்​தி​யிருக்​கிறது. ஒவ்​வொரு கொலைக்கு முன்​னால் ஒலிக்​கும் விசில் சத்​த​மும், ‘டென் லிட்​டில் இண்​டியன்​ஸ்’ தீம் மியூசிக்​கும் ஒரு​வித பீதியை ஏற்​படுத்​துகின்​றன.

ஹார்வி மாங்​கர் தனது எடிட்​டிங் மூலம் 97 நிமிட படத்​தில் வரும் 8 கொலைகளை​யும், அவசரம் இல்​லாமல் கச்​சித​மாகக் கையாண்​டிருக்​கிறார். ஒவ்​வொரு கொலை முடிந்​த​ பிறகும் கேம​ரா, உடைந்த பொம்​மையை நோக்கி நகரும் விஷூவல் ரிதம் பயத்தை ஏற்​படுத்​துகிறது.

ஃபேன்​டசி மற்​றும் நகைச்​சுவை படங்​களுக்​குப் பெயர்​போன பிரெஞ்சு இயக்​குநர் ரெனே கிளேர், இப்​படத்தை சாதா​ரணக் கொலைப் படமாக எடுக்​காமல், ஒரு ‘பிளாக் காமெடி’ கலந்த த்ரில்​ல​ராக மாற்றி வெற்​றிப்​பட​மாக்கி இருக்​கிறார்.

சட்​டத்​தால் தண்​டிக்​கப்​ப​டாத குற்​ற​வாளி​களை ஒரு நீதிப​தியே திட்​ட​மிட்டு சிறு​வர் பாடலை ஒலிக்க விட்​டு, ஒரு புதிர் விளை​யாட்​டு​போல தவிக்​க​ வைத்து தண்​டனை கொடுக்​கும் இரட்டை மனோநிலை ரசிக்க வைக்​கிறது. ஒரு மதி​யநேரத்​தை ஒதுக்​கிப்​ பார்த்​தால்​ மர்​மக்​ கதை விரும்​பிகள்​ தவற​விடக்​கூ​டாத பொக்​கிஷமாகத்​ தெரி​யும்​ படம்​ இது.

(செவ்​வாய்​தோறும்​ படம்​ ​பார்​ப்​போம்​)

SCROLL FOR NEXT