ஃப்யூரி (1936) - சமூக மனசாட்சியை உலுக்கும் ஆவணம் | ஹாலிவுட் மேட்னி 15

ஃப்யூரி (1936) - சமூக மனசாட்சியை உலுக்கும் ஆவணம் | ஹாலிவுட் மேட்னி 15
Updated on
3 min read

வெறிபிடித்த கும்பலால் எரிக்கப்பட்டு தப்பித்த ஒருவன், இறந்ததாக நாடகமாடி அக்கொலைகார கும்பலை கூண்டிலேற்ற முயல்வது ‘ஃப்யூரி’ (1936) படத்தின் ஒரு வரிக்கதை. சிகாகோ​வில் தன்னை பிரிந்து செல்​லும் காதலி கேத்​தரினுக்கு ‘மொமென்​டம்​(?)’ வாங்​கிக் கொடுக்​கிறார் ஜோசப் வில்​சன். அது மொமென்​டம் இல்லை மொமெண்டோ என்று திருத்​துகிற கேத்​தரின் வாஷிங்​டனில் டீச்​ச​ராக வேலை பார்க்​கிறாள்.

வில்​சன் பொருளாதார ரீதி​யாக செட்​டில் ஆனபிறகு திரு​மணம் செய்ய முடி​வெடுக்​கிறார்​கள். வில்​சனுக்கு தன் குடும்ப மோதிரத்​தோடு முத்​தத்​தை​யும் பரி​சாக கொடுத்​து​விட்டு கிளம்​பு​கிறாள் கேத்​தரின். மாதங்​கள் கடக்க, பிசினஸில் முன்​னேறி அவளைச் சந்​திக்க வரு​வ​தாகக் கடிதம் அனுப்பி விட்டு சொந்​தக் காரில் கிளம்​பு​கிறார் வில்​சன்.

எல்​லையை கடக்​கும்​போது அவர் மீது சந்​தேகப்​பட்​டு, ஷெரீப் முன் நிறுத்​துகிறார்​கள். ஒரு குழந்தை கடத்​தல் வழக்​கில் 10 ஆயிரம் டாலர் பிணையத் ​தொகை கேட்ட கும்​பலில் ஒரு​வன், இவரைப்​போல உப்பு வேர்க்​கடலை தின்​பவ​னாம்! ‘இல்​லி​னாய்​ஸ்’ நம்​பர் பிளேட், உயரம், எடை, பிணையத் தொகை​யாகக் கொடுக்​கப்​பட்ட டாலர்​களின் நம்​பர் வரிசை​யில் இவரது பர்​ஸிலுள்ள 5 டாலர் என அனைத்​தும் ஒத்​துப் போவ​தாகச் சொல்லி அவரை சிறை​யில் அடைக்​கிறார்​கள்.

கடத்​தல்​காரன்​(?) பிடிபட்ட செய்தி ஊர்​முழு​வதும் பரவு​கிறது. சட்​டத்​தின் மீது நம்​பிக்கை இழந்த ஒரு கோபக் கூட்​டம், சிறைச் சாலையை முற்​றுகை​யிட்​டு, ஸ்டேஷனை தீ வைத்து சாம்​பலாக்கி விடு​கிறது. காதலனைக் காண​வில்லை என்று பரிதவிக்​கும் கேத்​தரினுக்கு வில்​சன் சிறை​யில் இருப்​பது தெரிந்து வரு​கிறாள். அவள் கண்​முன் வில்​சனை நெருப்பு சூழ்​கிறது.

கேத்​தரின் மயங்கி விழுகிறாள். போதாக்​குறைக்கு அக்​கும்​பல் ஒரு ‘டைனமைட்​’டை​யும் வீசி​விட்​டுப் போகிறது. அது ஏற்​படுத்​தி​விட்ட வழி​யால் வில்​சன் தப்​பிக்​கிறான். அவனது விசு​வாச​மான நாய் ரெயின்போ இறந்து விடு​கிறது. அதனால் கோபம் கொண்ட வில்​சன், தன்​னைக் கொளுத்​தி​ய(?)வர்​களைப் பழி​வாங்​கத் துடிக்​கிறான்.

தன் சகோ​தரர்​கள் டாம் மற்​றும் சார்​லியை சந்​தித்​துப் பேசுகிறான்.வழக்கு தொடுக்​கப்​பட்டு அரசு வழக்​கறிஞர், இந்​தச் சம்​பவத்​துக்கு காரண​மான 22 பேர் கொண்ட கும்​பலை நீதி​மன்​றத்​தில் நிறுத்​துகிறார். ஆனால் குற்​ற​வாளி​களை அடை​யாளம் தெரி​யாது என ஷெரீப் முதல் பலரும் மறுத்து விடு​கிறார்​கள்.

வழக்கு தோல்​வியடை​யும் நிலைக்​குச் செல்ல, சிறை​யில் தீயிட்​டுக் கொளுத்​திய அந்த 22 பேரை​யும் தெளி​வாகப் படம் பிடித்த ‘நியூஸ் ரீல்’ காட்​சிகளை நீதி​மன்​றத்​தில் ஒப்​படைக்​கிறார் வழக்​கறிஞர். கும்​பலைத் தண்​டித்தே தீர வேண்​டும் என்று ஆவேசப்​படு​கிறார் வில்​சன். அவனது ஆவேசத்​தின் முடிவு என்ன? கும்​பல் தண்​டிக்​கப்​பட்​ட​தா? அவனையே நம்பி இருந்த கேத்​தரின் என்ன ஆனாள்? என்​பதை எமோஷனலாக சொல்​லி​யிருப்​பதே ‘ஃபியூரி’.

கலி​போர்​னி​யா​வின் சான் ஜோஸ் நகரில் நடந்த ப்ரூக் ஹார்ட் கொலைச் சம்​பவத்தை அடிப்​படை​யாகக் கொண்டு நார்​மன் கிராஸ்னா “மாப் ரூல்” என்ற கதையை எழுதி இருந்​தார். அதைத் தழு​வி, பார்ட்​லெட் கார்​மேக் என்​பவருடன் இணைந்து திரைக்​கதை எழு​தி, ஜெர்​மனின் புகழ் பெற்ற இயக்​குந​ரான ஃபிரிட்ஸ் லாங், தனது ஹாலிவுட் பயணத்தை தொடங்​கி​னார்.

இன்று நாம் பார்க்​கும் பல ‘சைக்​காலஜிக்​கல் த்ரில்​லர்’ மற்​றும் ‘டார்க் க்ரைம்’ படங்​களுக்​கான இலக்​கணத்தை வகுத்​துத் தந்​தவர் ஃபிரிட்ஸ் லாங். அழகியலை விரும்​பும் ஹாலிவுட் பட உலகில் உளவியலை வெளிப் படுத்​தும் ஜெர்​மன் ‘எக்​ஸ்​பிரஷனிச’த்தை இணைத்து தனித்​து​வ​மான படமாக உரு​வாக்​கி​னார். ஸ்பென்​சர் ட்ரேசி​யின் நடிப்பு இப்​படத்​தின் முது​கெலும்​பு.

‘பராசக்​தி’ சிவாஜி கணேசனின் சாயலில் அப்​பாவி காதல​னாகத் தோன்​றும் அவர், மொத்த கும்​பலும் தம்மை கொல்​லத் துடிப்​பது கண்டு வெறுப்​புற்​று, இறுகிப் போன மனநிலை​யில் இரண்டு வித​மான பரி​மாணங்​களை நடிப்​பில் வெளிப்​படுத்​தி​யிருக்​கிறார்.

வசனம் இல்​லாமலே, சிறைக் கம்​பிகளுக்​குப் பின்​னால் அவர் காட்​டும் பயம், கோபம் பார்​வை​யாளர்​களை உலுக்​கக்​கூடியது. எளிமை​யான ஒப்​பனை​யுடன், குறும்​புத்​தன​மாகக் காதலனுடன் பேசுவ​தி​லும், காதலன் இறந்​து​போன செய்தி கேள்​விப்​பட்டு புத்தி பேதலித்து திரிவது​மாக சில்​வியா சிட்​னி, கேத்​தரின் என்ற கேரக்​ட​ராகவே வாழ்ந்​திருக்​கிறார்.

ஷெரீப்​பாக வரும் எட்​வர்ட் எல்​லிஸ் முதலில் கம்​பீர​மாக விசா​ரித்​தா​லும் கூட்​டம் கூடியதும் தன் கையாலாகத்​தனத்தை வெளிப்​படுத்தி இருக்​கிறார். 10 அகாடமி விருதுகளுக்​குப் பரிந்​துரைக்​கப்​பட்டு 4 விருதுகளை வென்ற ஒளிப்​ப​தி​வாளர் ஜோசப் ரட்​டன்​பெர்க், படத்​தின் இருண்ட மனநிலையை ஒளி மற்​றும் நிழல்​களின் மூலம் பிர​திபலிக்​கிறார்.

சிறைச்​சாலை எரிக்​கப்​படும் காட்​சி​யில், தீயின் உக்​கிரத்​தைக் காட்​டு​வதை விட, அதை ரசித்து வேடிக்கை பார்க்​கும் மக்​களின் முக​பாவனை​களில் இருக்​கும் குரூரத்​தைக் காட்​டிய விதம் அதிர வைக்​கிறது. வதந்​தி​கள் எப்​படி மின்​னல் வேகத்​தில் பரவு​கின்றன என்​பதை விளக்க, கோழிக்​குஞ்​சுகள் மற்​றும் பெண்​கள் பேசிக்​கொள்​ளும் காட்​சிகளை இணைத்து அமைத்த ‘மாண்​டேஜ்’ உத்தி இன்​றும் ஒரு பாடம்.

வில்​சன் மனக் குழப்​பத்​தில் இருக்​கும்​போது அந்த 22 பேர்​களின் முகங்​களும் அவரைச் சுற்றி இருப்​ப​தைக் காட்​டு​வது மற்​றும் அரசு வழக்​கறிஞர் எப்​படி வாதாடப் போகிறோம் என்று பேசும்​போதே பார்​வை​யாளர் ரியாக் ஷனுடன் நீதி​மன்ற அறைக்கு அந்த காட்​சியை அழைத்​துச் சென்​ற​ விதம் என ஃபி​ராங்க் சல்​லிவனின் எடிட்​டிங் படத்​துக்​குப் புது ஸ்டைலை கொடுத்​தது.

நேர்த்​தி​யான பின்​னணி இசை​யின் மூலம் படம் முழு​வதும் ஒரு​வித பதற்​றத்தை தக்​க​வைத்​த​தில் இசையமைப்​பாளர் ஃபி​ரான்ஸ் வாக்​ஸ்​மேனின் மேதமை தெரி​கிறது. விசா​ரணை நடக்​கும்​போது நீதிப​தியே சாட்​சிக் கூண்​டில் ஏற்​றப்​பட்டு விசா​ரிக்​கப்​படு​வதும், நீதி​மன்​றத்​தையே தியேட்​ட​ராக்கி நியூஸ் ரீல் முக்​கிய சாட்​சி​யாக திரை​யிடப்​படு​வதும் ரசிக்க வைத்த புதிய மற்​றும் நுட்​ப​மான காட்​சிகள்.

கும்​பலாக சேரும்​போது மக்​கள் சிந்​திக்​காமல் எப்​படி மூர்க்​கத்​தன​மாக மாறுகிறார்​கள் என்​பதை இப்​படம் மிகத் துல்​லிய​மாகப் பதிவு செய்​துள்​ளது. இது வெறும் குற்​றப்​படம் அல்ல. சமூக மனசாட்​சியை உலுக்​கும் சினிமா ஆவணம்.

இந்​தப் படத்தை ‘ரீ​மாஸ்​டரிங்’ செய்து இப்​போது வெளி​யிட்​டாலும் புதுப் படம் என்றே நினைக்​குமளவுக்கு காட்சி உத்​தி​யிலும், ஒளிப்​ப​தி​விலும்​ தொழில்​நுட்​ப நேர்த்​தி இருக்​கிறது. ஒரு மதி​ய வேளை​யை தா​ராள​மாக இப்​படத்​துக்​கு அர்ப்​பணிக்​கலாம்​.

(செவ்​வாய்​தோறும்​ படம்​ ​பார்​ப்​போம்​)

ஃப்யூரி (1936) - சமூக மனசாட்சியை உலுக்கும் ஆவணம் | ஹாலிவுட் மேட்னி 15
ஏஸ் இன் த ஹோல் (1951): ஊடக அறத்தை விமர்சிக்கும் படம் | ஹாலிவுட் மேட்னி 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in