நடிகை பிரியங்கா
ராஜ மவுலி இயக்கும் ‘வாரணாசி’ மூலம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய சினிமாவுக்கு திரும்பி இருக்கிறார், பிரியங்கா சோப்ரா. இதில் மகேஷ் பாபு, பிருத்வி ராஜ் முக்கிய கதா பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதை அடுத்து மீரா நாயர் இயக்கும் ‘அம்ரி’ உள்பட சில படங்களில் பிரியங்கா நடித்து வருகிறார். இந்நிலையில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியுடன் இணைந்து பணியாற்ற இருப்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், தன்னை ஊக்கப்படுத்திய நடிகைகள் குறித்து பேசிய பிரியங்கா, ஏஞ்சலினா ஜோலி, பெனிலோப் குரூஸ், சல்மா ஹயெக் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார்.
ஏஞ்சலினாவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருப்பதையும் உறுதி செய்தார். ஆனால், “இப்போது அதைப் பற்றி எதையும் சொல்ல இயலாது” என்றும் அவர் கூறியுள்ளார். அது திரைப் படமா, வெப் தொடரா என்பது குறித்து அவர் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.