ஹாலிவுட் நடிகர் கீகன் ஆலன்
ஹாலிவுட் நடிகர் கீகன் ஆலன். இவர், கிங் கோப்ரா, அக்டர்ஸ் அனானிமஸ், நோ எஸ்கேப் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். ‘ப்ரெட்டி லிட்டில் லையர்ஸ்’ என்ற தொடர் மூலம் உலகளவில் அறியப்பட்டவர் இவர்.
இவர், மேற்கு ஹாலிவுட்டில் உள்ள பிரபலமான கடைக்குச் சென்றுவிட்டு பார்க்கிங் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த 2 பேர், அவர் தலையில் திடீரென துப்பாக்கியால் பலமுறைத் தாக்கினர். பின்னர், மிரட்டி அவரது கைகடிகாரத்தைப் பறித்துவிட்டுத் தப்பிச் சென்றனர். தலையில் ரத்தம் சிந்திய நிலையில், இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து, வீடியோ ஒன்றை கீகன் ஆலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “மேற்கு ஹாலிவுட் இனி பாதுகாப்பானதாக இல்லை. எனது கைக்கடிகாரத்துக்காக என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டிய 2 இளைஞர்களால் துப்பாக்கி மற்றும் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டேன்; அவர்கள் உண்மையிலேயே என்னைக் கொன்றிருக்கவும் கூடும். ஆனால் கடவுள் என்னைக் காப்பாற்றிவிட்டார். ஒரு கைக்கடிகாரத்துக்காக என் உயிரே போகும் நிலையில் இருந்தேன். கண்டிப்பாக உயிர் போய்விடும் என்று பயந்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கண்டறியுமாறு அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.