ஹாலிவுட்

ஏஸ் இன் த ஹோல் (1951): ஊடக அறத்தை விமர்சிக்கும் படம் | ஹாலிவுட் மேட்னி 14

ராம்குமார் சுப்பாராமன்

கு​கைக்​குள் சிக்கி உயிருக்​குப் போராடு​பவனை பப்​ளிசிட்​டிக்​காக, ஒரு பத்​திரிகை காரர் எப்​படி பயன்​படுத்​தி​னார் என்​பது, ‘ஏஸ் இன் த ஹோல்’ (ACE IN THE HOLE - 1951) படத்​தின் ஒன்​லைன். சார்​லஸ் சக் டேட்​டம் என்ற பத்​திரி​கை​யாளர் ஏறக்​குறைய 11 பத்​திரி​கை​களி​லிருந்து மோச​மான காரணங்​களுக்​காக பணிநீக்​கம் செய்​யப்​பட்​ட​வர்.

நியூ மெக்​ஸிகோ​விலுள்ள அல்​பு​கர்க்கி நகரில் ‘சன்​-புல்​லட்​டின்’ என்​கிற பத்​திரிகை அலு​வல​கத்​துக்​குச் சென்று வேலை கேட்​கிறார். ‘கெட்ட செய்​தி​தான் விலை போகும்’ என்று நம்​பும் டேட்​டனை பத்​திரிகை நிறு​வனர் ஜேக்​கப் பூட், 40 டாலர் சம்​பளத்​துக்கு வேலைக்கு எடுத்​துக் கொள்​கிறார்.

ஒரு​வருட​மாக எந்த பரபரப்​பும் இல்​லாமல் வேலை பார்க்​கும் டேட்​டமை ‘ரேட்​டில் ஸ்னேக்’ வேட்டை பற்றி செய்தி சேகரிக்க புகைப்​படக்​காரரு​டன் அனுப்​பு​கிறார் பூட். வழி​யில் பெட்​ரோல் போட ‘பங்​கி’ல் காரை நிறுத்​தும்​போது, அரு​கிலுள்ள செவ்​விந்​தி​யப் பழங்​குடி​யினர் வாழ்ந்த பழமை​யான பாறைக்​குடைவுப் பகு​தி​யில், லியோ என்ற அந்த ‘பங்க்’ காரர் மாட்​டிக் கொண்ட செய்​தியை அறிகிறார்.

அந்​தக் குகைக்​குள் குரல் கொடுத்​த​படியே சென்​று, சிக்கி இருக்​கும் லியோவை பார்க்​கிறார். அரு​கில் சென்று காப்​பாற்ற முடி​யாத​படி கல் அறைக்​குள் இருக்​கும் அவரிடம் பேசி, புகைப்​படம் எடுக்​கிறார். டேட்​ட​முடைய குயுக்தி மூளை வேலை செய்​கிறது. ‘பண்​டைய சாபத்​தால் கல்​லறைக்​குள் அடைக்​கப்​பட்ட மனிதன்’ என்று தலைப்​பில் செய்தி வெளி​யிடு​கிறார்.

மீட்பு பணி​யில் ஈடு​படும் கட்​டு​மான ஒப்​பந்​த​தா​ர​ரான சாம் ஸ்மோலெட் ‘12 மணி நேரத்​துல காப்​பாத்​திடலாம்’ என்று சொன்​னது பிடிக்​காமல் உள்​ளூர் ஷெரீப், க்ரெட்​ஸரிடம் பேசும் டேட்​டம், அவருக்​குத் தேர்​தலில் வெற்​றி​பெற உதவும் வகை​யில் புகழ் வெளிச்​சம் தரு​வ​தாகக் கூறி, தன் வசம் இழுக்​கிறார். மீட்​புப் பணியை இழுத்​தடித்து தொடர் செய்​தி​யாக்​கத் திட்​டம் போடு​கிறார்.

குகை வழி​யாகச் சென்று மீட்​ப​தற்​குப் பதிலாக, மலை​யின் மேலிருந்து துளை​யிட்டு மீட்​கலாம் என்று டேட்​டம் கொடுக்​கும் ஐடி​யாவை ஷெரீப். ஒப்​பந்​த​காரரிடம் சொல்​கிறார். அதற்கு 5 நாளாகுமே என்று முதலில் தயங்​கி​னாலும் ஷெரீப் தயவு தேவைப்​படு​வ​தால் அவரும் ஒப்​புக் கொள்​கிறார். மீட்​புப் பணி ஆரம்​பிக்​கிறது.

லியோவை​ பிடிக்​காத அவனது மனைவி லொரைன் ஓடிப்​போக முயற்​சிக்​கிறார். அவளைத் தடுத்​து, ‘இந்த நேரத்​தில் கணவனை விட்​டுப் போகக் கூடாது’ என்று எச்​சரிக்​கும் டேட்​டம், லியோவைப் பற்​றிய செய்​தி​களை, லொரைனை பேட்டி எடுத்து வெளி​யிடு​கிறார். விளைவு, இயல்பு வாழ்க்​கையை விரும்​பாத மக்​கள், கூட்​ட​மாக அலைமோதுகிறார்​கள். கடை, வியா​பாரம் களை கட்​டு​கிறது.

ரேடியோ, சேனல்​கள் லைவ் அப்​டேட் கொடுக்​கிறார்​கள். டேட்​டமை வேலையை விட்டு அனுப்​பிய​வர்​கள் அனை​வரும் அங்கு குவி​கிறார்​கள். டேட்​டம், ஷெரீப் மூலம் அவர்​களை உள்ளே செல்ல விடா​மல் தடுக்​கிறான். அவன் மட்​டுமே லியோவை சந்​தித்து ‘அப்​டேட்’ வெளி​யிடு​கிறான். டேட்​டமை சந்​திக்க வந்த பூட், அவன் பண்​ணுவது தவறு என்​கிறார்.

இந்த செய்​தியை வைத்​துக் கொண்டே பல மிகப் பெரிய நிறு​வனங்​களில் பேரம் பேசுகிறார். எளி​தில் காப்​பாற்​றப்​பட்​டிருக்க வேண்​டிய ஓர் அப்​பா​வியை தன் சுயநலத்​தால் காட்​சிப் பொருளாக்​கு​கிறார். லியோ பிழைத்​தா​னா? டேட்​ட​மின் பேராசைக்கு முடிவு என்ன? என்​பதே இப்​படம்.

1925-ல் ஃப்​ளாய்ட் காலின்ஸ் என்ற குகை ஆய்​வாளர், ‘மேமத் குகை தேசி​யப் பூங்​கா’ பகு​தி​யில் மாட்​டிக் கொண்ட விபத்​து​தான் அமெரிக்​கா​வில் முதன்​முறை​யாக, தேசிய ஊடகத் திரு​விழா​வாக மாறியது.

வானொலி மற்​றும் பத்​திரி​கைகள் போட்டி போட்​டுக்​கொண்டு செய்​தி​களை வெளி​யிட்​டன. ஒரு மனிதனின் உயி​ராபத்து திரு​விழா​வாக மாற்​றப்​பட்​ட அந்த சம்​பவத்தை அடிப்​படை​யாக வைத்து லெஸ்​ஸர் சாமுவேல், வால்​டர் நியூமேனுடன் இணைந்து திரைக்​கதை​யில் கற்​பனை​யாக சில மாற்​றங்​களைச் செய்​து, ஊடக அறத்தை விமர்​சிக்​கும் படைப்​பாகத் தயாரித்து இயக்கி உள்ளார் பில்லி வைல்​டர்.

லியோ மினோசா கதா​பாத்​திரத்​தில் நடித்த ரிச்​சர்ட் பெனடிக்ட் குகைக்​குள் சிக்​கிக்​கொண்​டு, வலி​யிலும் நம்​பிக்​கை​யிலும் போராடும் அந்த முக​பாவனை​களை மிக எதார்த்​த​மாக வெளிப்​படுத்தி இருக்​கிறார். இறப்பு கண்​முன் உறு​தி​யாகத் தெரிந்​தவுடன் ஃபாதரைக் கூப்​பிட்டு பிரேயர் பண்​ணச் சொல்​லும்​போது கண் கலங்குவது பரி​தாபத்தை வரவழைக்​கும் நடிப்​பு.

படத்​தின் அச்​சாணியே டேட்​ட​மாக நடித்த ‘கிர்க் டக்​ளஸ்​’​தான். ஒரு மனிதனின் துயரத்தை விற்​பனைப் பொருளாக்​கும் மனசாட்​சி​யற்ற பத்​திரி​கை​யாள​ராக அவர் வெளிப்​படுத்​திய நடிப்பு அசுரத்தனமானது. ரஜினி ஸ்டைலில் (இது அதற்கு முந்​தைய ஸ்டைல்) டைப்​ரைட்​டிங் மெஷின் லீவரை இழுத்​து​விட்டு அதில் தீக்​குச்சி உரசி பற்ற வைக்​கிறார்.

பொய்​யும், கற்​பனை​யு​மாகவே வாழ்ந்த அவர், உண்​மை​யின் காலடி​யில் வீழ்​வது​போல் இறு​திக் காட்​சி​யில் ‘டெல் த ட்ரூத்’ போர்​டின் முன் விழுந்து உயிர் துறப்​பது டைரக்​டர் டச். லொரைனை அவர் பளார் பளாரென அறை​யும்​போது நம் கன்​னம் வலிக்​கிறது. அதற்கு ‘லொரைன்’ கொடுக்​கும் ரியாக் ஷனில் அடி உண்​மை​யில் விழுந்​திருக்க வேண்​டும்.

லொரை​னாக ஜான் ஸ்டெர்​லிங். கணவன் உயிருக்​குப் போராடிக் கொண்​டிருக்​கும்​போது, அதைப் பற்றி கவலைப்​ப​டா​மல் தலை​முடி​யின் நிறம் மாற்​று​ வ​தி​லும், பணம் சம்​பா​திப்​ப​தி​லும் குறி​யாக இருக்​கும் பெண்​ணாக வெறுப்பை வரவழைக்​கும் அளவுக்​குத் தத்​ரூப​மாக நடித்​திருக்​கிறார்.

‘சார்​லஸ் லாங்’ ஒளிப்​ப​தி​வில் பிரம்​மாண்​டத்​தைக் காட்​டு​கிறார். குகைக்​குள் இருக்​கும் இருட்​டை​யும், வெளியே மக்​கள் கூடு​வதை திரு​விழா​போல வெளிச்​ச​மாக வேறு​படுத்​திக் காட்​டி​யிருக்​கிறார். கூட்​டத்​தின் நெரிசலை அவர் படம்​பிடித்த விதம், பார்​வை​யாள​ருக்கு மூச்​சுத் திணறலை ஏற்​படுத்​தும். எடிட்​டிங் ஆர்​தர் ஷ்மிட். அமை​தி​யான இடம் எப்​படி ஒரு பரபரப்​பான சந்​தை​போல் மாறுகிறது என்​பதை அழகாகக் கோர்த்​திருக்​கிறார்.

இலவச​மாகப் பார்க்​கும் இடத்​துக்கு 25 சென்ட், 50 சென்ட், பிறகு 1 டாலர் என்று ஆங்​காங்கே காட்​டும் போர்டு ஷாட்​கள் மூலம் அந்த இடம் எப்​படி வியா​பார ஸ்தல​மாக மாறுகிறது என்​பதை உணர்த்​துகிறார். கிளை​மாக்​ஸில் குகைக்​குள் துளை​யிடும் சத்​த​மும், வெளியே நடக்​கும் கொண்​டாட்​ட​மும் மாறி மாறி வரும் காட்​சிகள் பதற்​றத்தை அதி​கரிக்​கின்றன.‘ஹியூகோ ஃப்​ரீட்​ஹாஃபர்’ இசையை மிகக்​குறை​வாக பயன்​படுத்​தி​யிருப்​பதே படத்​தின் பலம். பாலை​வனக் காற்​றின் சத்​த​மும், துளை​யிடும் இயந்​திரத்​தின் சத்​த​முமே பல இடங்​களில் இசை​யாக மாறி​யிருக்​கிறது.

ஃபிலிம் நாய்ர் படமான இது வெளி வந்​த​போது பில்லி வைல்​டரின் சன்​-​நாய்ர் என்​றழைக்​கப்​பட்​டது. அதாவது, இருட்​டில் நடக்​கும் குற்​றங்​களை விட, பட்​டப்​பகலில் வெயில் வெளிச்​சத்​தில் நடக்​கும் இந்​தக் குற்​றம் (மனித நேயமற்ற செயல்) இன்​னும் கொடூர​மானது என்​ப​தைக் குறிக்​கும். சக் டேட்​டம், சாதாரண விபத்தை பொய்​யாகச் சித்​தரித்து தலைப்​புச் செய்​தி​களை உரு​வாக்​கு​கிறார்.

மீடியா மோகத்​தில் சாதாரண மக்​களே தங்​களை பரபரப்​பாக்​கிக் கொள்​ளும் இன்​றைய டிஜிட்​டல் யுக “கிளிக்​பைட்” (Clickbait) கலாச்​சா​ரத்​துக்​கும் 24 மணி நேர செய்தி சேனல்​களின் பரபரப்​புப் பசிக்​கும் (Sensationalism) 75 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படமாக இருந்​தா​லும் இது ​ பொருத்​த​மாக இருக்​கிறது. பகல்பொழுதை பரபரப்​பாக்​க வேண்​டு மென்​றால்​ இப்​படத்​தைப்​ ​பார்​த்​து ரசிக்கலாம்​.

(செவ்​வாய்​தோறும்​ படம் பார்ப்போம்)

SCROLL FOR NEXT