‘அனாடமி ஆஃப் எ மர்டர்’ 1959: நீதிபதி எழுதிய நீதிமன்ற கதை! | ஹாலிவுட் மேட்னி 13

‘அனாடமி ஆஃப் எ மர்டர்’ 1959: நீதிபதி எழுதிய நீதிமன்ற கதை! | ஹாலிவுட் மேட்னி 13
Updated on
3 min read

“ஒருவன் குற்றவாளியா, நிரபராதியா என்பதை வழக்கறிஞர்களின் வாதங்களும், நிரூபிக்கப்படும் ஆதாரங்களுமே தீர்மானிக்கின்றன என்ற உண்மையை கூறு போட்டு ஆராயும் சட்ட நுணுக்கப் படம், 1959-ல் வெளியான ‘அனாடமி ஆஃப் எ மர்டர்’ வழக்கு ஒன்​றில் தோல்வி அடைந்​த​தால் அவமானப் படுத்​தப்​பட்ட பால் பீக்​லர் என்ற வழக்​கறிஞருக்​கு, பார்​னெல் மெக்​கார்த்தி என்ற குடி​கார நண்​பரே ஆறு​தல்.

செகரட்​டரி ‘மை​டா’வுக்கு பலமாத சம்பள பாக்கி என்​றாலும் வேலை​யில் குறை வைப்​ப​தில்​லை. அவள் எழுதி வைத்த குறிப்​பிலுள்ள நம்​பருக்கு பீக்​லர் போன் செய்​கிறார். லாரா மானியன் என்ற பெண்​மணி, கொலை செய்​து​விட்டு சிறை​யில் இருக்​கும் தன் கணவருக்கு உதவ முடி​யு​மா? என்று கேட்​கிறாள்.

அடிக்​கடி மீன்​பிடிக்க செல்​வ​தால் கொலை விவரம் தெரி​யாத பால் பீக்​லரிடம் அந்த கேஸை எடுக்​கச் சொல்​கிறார் மெக்​கார்த்​தி. லாரா​வின் கணவர் லெப்​டினென்ட் ஃப்​ரெட்​ரிக் மானியன், லாராவை பாலியல் வன்​கொடுமை செய்த பார் உரிமை​யாளர் பார்னி குவில் என்​பவனை கொன்​று​விட்டு சிறை​யில் இருக்​கிறார்.

அடுத்​த​நாள் லெப்​டினென்டை சந்​தித்து சில கேள்வி​களைக் கேட்​கிறார், பீக்​லர். பின்​னர் லாரா​விடம் பேசுகிறார். வழக்கு விசா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்​படு​கிறது. சாட்​சிகள் விசா​ரிக்​கப்​படு​கிறார்​கள். பார்​னி​யின் சொத்​துக்​களை நிர்​வகிக்​கும் மேரி பிலான்ட் என்​பவளும் ‘பார்னி எந்​தப் பெண்​ணிட​மும் தவறாக நடக்க மாட்​டார்’ என்று சாட்சி சொல்​கிறாள்.

எதிர்​தரப்பு வழக்​கறிஞர்​கள் லாராவை கேள்வி​களால் கிழித்​தெடுக்​கிறார்​கள். வன்​கொடுமை​யின் முக்​கிய ஆதா​ர​மான உள்​ளாடை சம்பவ இடத்​தில் தேடிப் பார்த்​தும் கிடைக்​க​வில்லை என்று போலீஸ்​காரர்​கள் சொல்​கிறார்​கள். லாரா உண்​மை​யில் பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​டாளா? காணா​மல் போன அந்த உள்​ளாடை, எப்​படி கிடைத்​தது? துப்​பாக்​கியால் சுட்​டுக் கொலை செய்த லெப்​டினென்ட் எப்​படி விடு​தலை ஆகிறார்? என்​பதை ஆற அமர, கூறு போட்டு விளக்​கு​வதே ‘அனாடமி ஆஃப் எ மர்​டர்’.

இது கதையல்ல. உண்மை சம்​பவம்! 1952 -ம் ஆண்டு நடந்த கொலை வழக்​கில் வழக்​கறிஞ​ராக ஆஜரான ஜான் டி.வோல்​கர், அதன்​பிறகு மிச்​சிகன் மாநில நீதிப​தி​யாக பணிபுரிந்​தார். அப்​போது ‘ராபர்ட் ட்ரேவர்’ என்ற புனைப் பெயரில் அந்த கொலை வழக்கை ஒருநாவலாக எழுதி வெளி​யிட்​டார். நாவலை அடிப்​படை​யாக வைத்து வெண்​டல் மேய்ஸ் சுவாரஸ்​ய​மான திரைக்​கதை எழுத, இப்​படத்தை தயாரித்து இயக்​கிய​வர் ஒட்டோ பிரெமிங்​கர்.

பால் பீக்​ல​ராக நடித்த ஜேம்ஸ் ஸ்டீவர்ட், சாட்​சிகளிடம் கிண்​டலும் கேலி​யும் கலந்து கேள்வி கேட்​ப​தி​லும், எதிர்​தரப்பு வழக்​கறிஞர்​களிடம் தனது சாட்​சிகள் மாட்​டும்​போது உச்​சஸ்​தா​யி​யில் அப்​ஜெக் ஷன் தெரி​விப்​ப​தி​லும், தனது ‘கேரியர் பெஸ்ட்’ நடிப்பை வழங்​கி​யிருக்​கிறார். பீஸ்​கூட வாங்​காமல் ஏமாறும் வழக்​கறிஞருக்கு லைஃப் டைம் செட்​டில்​மென்ட் வழங்​கலாம்.

அவருக்கு ஆலோ​சக​ராக, குடி​கார பெரிய​வ​ராக ஆர்​தர் ஓ கானலும், ஊதி​யம் வாங்​கும்​வரை வேலையை விட்​டுப் போக மாட்​டேன் என்று உறு​தி​யாக இருக்​கும் உயர​மான, அழகான செகரட்​டரி​யாக ஈவ் ஆர்​ட​னும் நல்ல பங்​களிப்​பு. முக்​கிய குற்​ற​வாளி ஃப்​ரெட்​ரிக் மான்​ய​னாக நடித்​திருக்​கிறார், பென் கஸ்​ஸா​ரா.

முகத்​தில் பதற்​றம், இறுக்​க​மான உடல். மனை​வியைக் பாலியல் வன்​கொடுமை செய்​தவனைச் சுட்​டுக் கொன்​று​விட்டு ஞாபகமே இல்லை என்​கிறார். கதை​யின் திருப்​பு​முனை சொல்​லான ‘இர்​ரெசிஸ்​டிபிள் இம்​பல்​ஸ்’ அவர் நடிப்​பிலும் இருக்​கிறது. நடிகை ‘லீ ரெமிக்’ பாதிக்​கப்​பட்ட லாரா மானிய​னாக, கேஸுவலாக கூலிங் கிளாஸ், டைட் ஜீன்​ஸ், பாவாடை சகிதம் வலம் வரு​கிறார்.

பார்ட்​டி, சரக்கு என்று அலை​யும் அவளை ஒரு கட்​டத்​தில் பீக்​லரே “உன் கணவன் ரிலீஸ் ஆகும்​வரை அடக்க ஒடுக்​கமா இரு” என்று அட்​வைஸ் பண்ண வேண்​டிய​தாகிறது. ரொமான்ஸ் வழி​யும் பார்​வை​யுடன் ‘நல்​ல​வ​ரா, கெட்​ட​வ​ரா?’ என்று யூகிக்க முடி​யாத வகை​யில் நடித்​திருக்​கிறார். எதிர்​தரப்பு வழக்​கறிஞர்​களாக வரும் ப்ரூக்ஸ் வெஸ்ட் மற்​றும் ஜார்ஜ் சி ஸ்காட்​டின் குதர்க்​க​மான கேள்விகளால் சாட்​சிகளுக்கு வரு​கிறதோ இல்​லை​யோ? நமக்கு வரு​கிறது கோபம்! வில்​லத்​தன​மான நடிப்​பு.

நீதிபதி எழு​திய கதை என்​ப​தால், நீதி​மன்​றத்​தில் நடக்​கும் சிறிய யுக்​தி​கள், நீதி​மன்ற நடை​முறை​கள் அனைத்​தும் யதார்த்​த​மாக​வும், நுணுக்​க​மாக​வும் காட்​டப்​பட்​டுள்​ளன. தொழில்​முறை நடிகர் அல்​லாத உண்​மை​யான வழக்​கறிஞ​ரான ஜோசப் வெல்ச் என்​பவரை நீதிப​தி​யாக்கி இருக்​கிறார்​கள். காமெடி கலந்து பேசுவதோடு நேர்​மைக்கு நெருக்​க​மானவ​ராக நடித்​திருக்​கிறார்.

அவரது உடல்​மொழி வெகு இயல்​பாக இருக்​கிறது. கொல்​லப்​பட்ட பாலியல் குற்​ற​வாளி​யான பார்னி குவில்​-லாக முர்ரே ஹாமில்​டன் புகைப்​படத்​தில் மட்​டுமே நடித்​திருக்​கிறார். மொத்​தக் கதை​யும் இவரைச் சுற்​றித்​தான்! கேத்​ரின் கிரான்ட், மேரி பிலான்ட் ஆக வரு​கிறார். அமை​தி​யான அதே நேரம் அழுத்​த​மான நடிப்​பு. கிளை​மாக்​ஸில் ஸ்காட் கேட்​கும் முறை தவறிய கேள்விக்கு ‘பார்னி குவில் என் அப்​பா’ என்று கத்​தும்​போது மொத்த நீதி​மன்​றத்​தை​யும் அமை​திப்​படுத்தி விடு​கிறார்.

காணா​மல் போன உள்​ளாடையை சலவை அறை​யில் அப்பா போட்​டிருந்​ததை அவள் கொண்டு வந்து கொடுத்​த​தாலேயே வன்​கொடுமை நிரூபிக்​கப்​படுகிறது. ஒளிப்​ப​தி​வாளர் சாம் லெவிட், நீதி​மன்​றத்​தின் அசலான முகம் மற்​றும் நடிகர்​களின் உணர்ச்​சிகளைத் துல்​லிய​மாகக் காட்​டிய விதத்​தில் டைரக்​டரின் கண்​களாகச் செயல்​பட்​டிருக்​கிறார்.

உறுத்​தாத ஒளிப்​ப​திவுக்குத் துறுத்​தாத எடிட்​டிங். லூயிஸ் ஆர் லொஃப்​லர் 100 படங்​களுக்​குமேல் பணிபுரிந்த கோல்​டன் ஏஜ் எடிட்​டர். படத்​தின் நீள​மான நீதி​மன்ற காட்​சிகளுக்கு கத்​தரி போடா​மல் நம்​மை​யும் அங்​குள்ள ஜூரிக்​கள்​போல் அமர வைத்​து​விடு​கிறார். ட்யூக் எலிங்​டன், இசை​யால் அவ்​வப்​போது அதிர வைக்​கிறார். அதற்​கு​முன் படங்​களில் வந்த நீதி​மன்ற காட்​சிகளுக்கு பயங்கர ஆர்​கெஸ்ட்ரா மற்​றும் கிளாசிக்​கல் நோட்​களு​டன் இசை இருக்க, இப்​படத்​தின் ஜாஸ் இசை புது​மை​யாக இருப்​ப​தால் ரசிக்​கப்​பட்​டது.

‘தற்​காலிக பைத்​தி​யம்’ என்ற வாதத்​தால் ஒட்​டுமொத்த ஜூரிக்​களும், குற்​ற​வாளிக்கு விடு​தலை வழங்​கு​வதும் நீதி​மன்​றத்​தில் பாலியல் சொற்​களை பயன்​படுத்​திய வித​மும் சர்ச்​சை​யானது. கதை​யில் எந்த கேரக்​டரை​யும் நல்​ல​வர், கெட்​ட​வர் என்று விவரித்​துக் காட்​ட​வில்​லை.

குற்​றத்​தைக் காட்​டா​மல், குற்​றம் நடந்த மனநிலையை காட்டி நீதி​மன்ற அறையை, மனநல ஆய்​வுக்​கூட​மாகவே மாற்றிவிட்​டார் இயக்​குநர் ஒட்டோ பிரெமிங்​கர். நவீன ‘கோர்ட் ட்ரா​மா’ படங்​களின் முன்​னோடி​யான சற்​றே பெரிய இப்​படத்​தை திரைக்​கதை கட்​டமைப்​புக்​காக​வும்​ வசனங்​களின்​ சுவாரஸ்​யத்​துக்​காக​வும்​ அனுப​வித்​து ரசிக்​கலாம்​.

(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)

- ramkumaraundipatty@gmail.com

‘அனாடமி ஆஃப் எ மர்டர்’ 1959: நீதிபதி எழுதிய நீதிமன்ற கதை! | ஹாலிவுட் மேட்னி 13
‘த ராங் மேன்’ 1956: ‘மாஸ்டர் ஆப் சஸ்பென்ஸ்’ - ஹிட்ச்காக்கின் சென்டிமென்ட் காவியம் | ஹாலிவுட் மேட்னி 12

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in