மூடிய நீதிமன்ற அறையில், மரண தண்டனையை எதிர்நோக்கும் சிறுவனின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 12 மனிதர்களின் மனசாட்சிகளுக்கிடையே வெடிக்கும் தர்க்கப் போராட்டம்தான் ‘12 ஆங்க்ரி மென்’ (12 ANGRY MEN -1957). சுட்டெரிக்கும் கோடைநாள். நீதிமன்றத்தின் 2-வது தளத்திலுள்ள மூடிய அறை.
தந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 18 வயது சிறுவனின் வழக்கில், ஒருமனதாகத் தீர்ப்பளிக்க 12 ஜூரிகளை அறைக்குள் அனுப்பி வைக்கிறார் நீதிபதி. தன் உயிரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகும் நடுவர்களை, பரிதாபமாகப் பார்க்கிறான் அச்சிறுவன்.
அவனுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டதாகத் தோன்றியதால், வழக்கு மிக எளிதானதுபோல் ஜூரிகளுக்கு படுகிறது. முதற்கட்டமாக ரகசிய வாக்கெடுப்பு நடக்கிறது. 11 பேர் குற்றவாளி என்று எழுதியிருக்க, ஒரே ஒரு துண்டுச் சீட்டு மட்டும் குற்றமற்றவன் என்கிறது.
அனைவரும் அதிர்ச்சியடைய, ‘ஒரு சிறுவனின் உயிர் தொடர்பான பிரச்சினை இது; அவசரப்படாமல் விவாதிக்கலாமே’ என்று, வழக்கின் நியாயமான சந்தேகத்தை விதைக்கிறார் அந்தத் துண்டுச் சீட்டை எழுதிய ஜூரி 8.
அரசுத் தரப்போ, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட சுவிட்ச் பிளேடு கத்தி மிகவும் அரிய வகை என்கிறது. ஆனால் ஜூரி 8, முந்தைய நாள் இரவு ஓர் அடமானக் கடையில் தான் வாங்கிய அதே போன்ற கத்தியைத் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்து மேசையின் மீது ஓங்கிக் குத்துகிறார்.
அனைவருக்கும் அதிர்ச்சி. பிறகு எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், ஜூரி 8-ன் துணிச்சலால் ஈர்க்கப்பட்ட ஜூரி 9, “குற்றவாளி இல்லை” என்று தன் வாக்கை மாற்றுகிறார்.
வாதங்கள் தீவிரமடைகின்றன. நள்ளிரவில் சிறுவன் “உன்னைக் கொன்றுவிடுவேன்!” என்று கத்திய சத்தத்தையும், உடல் தரையில் விழுந்ததையும் கேட்டதாகக் கீழ் வீட்டு முதியவர் சாட்சியம் அளித்திருந்தார்.
இங்குதான் ஜூரி 8 தன் சந்தேகத்தை எழுப்புகிறார்: புகைவண்டி அவ்வளவு சத்தத்துடன் கடக்கும்போது முதியவரால் எப்படிக் குரலைத் துல்லியமாகக் கேட்டிருக்க முடியும்? மேலும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அந்த முதியவர், சத்தம் கேட்ட 15 வினாடிகளுக்குள் படுக்கையிலிருந்து எழுந்து வந்து சிறுவன் ஓடுவதைப் பார்த்ததாகக் கூறியதை, தானே காலை இழுத்து நடந்து செயல்விளக்கம் காட்டுகிறார் ஜூரி 8. இந்த தர்க்கங்களால் வாக்கு எண்ணிக்கை 9 – 3 ஆக மாறுகிறது.
இறுதியாக, ஒரு ‘எல்’ புகைவண்டி கடந்து செல்லும்போது, அதன் கடைசி இரு பெட்டிகளின் ஊடாக ஜன்னலிலிருந்து கொலையைப் பார்த்ததாகச் சொல்லப்பட்ட எதிர் வீட்டுப் பெண்மணியின் சாட்சியமும் உடைகிறது.
நீதிமன்றத்தில் கண்ணாடி அணியாமல் சாட்சியம் அளித்திருந்தாலும், அவளது மூக்கின் இருபுறமும் மூக்குக் கண்ணாடி அணிவதால் ஏற்படும் ஆழமான தழும்புகள் இருந்ததை ஜூரி 9 சுட்டிக்காட்டுகிறார்.
இரவில் யாரும் கண்ணாடி அணிந்து படுக்கப் போவதில்லை. நள்ளிரவில் திடுமென எழுந்து, மின்னல் வேகத்தில் கடந்து சென்ற ரயிலின் ஜன்னல் வழியே அவளால் எப்படிச் சிறுவனின் முகத்தைத் துல்லியமாகப் பார்த்திருக்க முடியும் என்று எழுந்த சந்தேகம், இறுதியில் வாக்கு எண்ணிக்கையையே 11 – 1 என புரட்டிப் போடுகிறது.
ஆரம்பத்திலிருந்தே சிறுவனை வன்மத்தோடு எதிர்த்த ஜூரி 3 மட்டும் எரிச்சலாகி, அவனுக்கு எதிரான ஆதாரங்களை அடுக்கிக் கத்துகிறார். ஆனால், தன் சொந்த மகன், தன்னை விட்டு ஓடிய கோபத்தையும் விரக்தியையும்தான் அந்தச் சிறுவன்மீது காட்டிப் பழிவாங்கத் துடித்தோம் என்பதை அவர் உணரும் கணம் அது.
இறுதியில் மனமுடைந்து, அழுது, “குற்றவாளி இல்லை” என்று தன் வாக்கை மாற்றுகிறார். 12 ஜூரிகளும் ஒருமனதாகச் சிறுவன் நிரபராதி என்று தீர்ப்பளித்துவிட்டுக் கலைகிறார்கள்; இடையில் கொட்டித் தீர்த்த மழையால் கோடைப் புழுக்கமும் தணிந்திருக்கிறது.
ஒரே ஒரு மனிதன் எழுப்பிய நியாயமான சந்தேகம், ஓர் அப்பாவி உயிரைக் காப்பாற்றிய திருப்தியுடன் அனைவரும் வெளியேறு கிறார்கள். நீதிமன்றப் படிக்கட்டுகளில் கலைந்து செல்லும்போது, ஜூரி 9 ஓடிவந்து ஜூரி 8-ன் கைகளைப் பற்றியபடி பெயரைக் கேட்க, ‘டேவிஸ்’ என்று கூறிவிட்டு அவர் நடந்து செல்கிறார்.
தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை மையமாக வைத்து ரெஜினால்ட் ரோஸ் எழுதிய நாடகத்தை, அவரே திரைக்கதையாக விரிவுபடுத்தினார். அதை, சிட்னி லூமெட் தனது முதல் திரைப்படமாக இயக்கினார்.
12 மனசாட்சிகளை மோதவிட்டு, ஒரு சாமானியனின் உயிரைப் பற்றிய அலட்சியமான தீர்ப்புகளின் அபாயத்தை அக்குவேறு ஆணிவேறாக அலசிய அரிய படைப்பு இது.
ஒரே அறைக்குள் முழுத் திரைப்படத்தையும் விறுவிறுப்பான தர்க்கப் போராக நகர்த்தியதோடு, நடந்த சம்பவங்களை நேரடியாகக் காட்டாமல், வாக்குவாதங்கள் மூலம் பார்வையாளர்களின் மனக்கண்ணில் காட்சிகளை உருவாக்கியிருப்பது சிட்னி லூமெட்டின் இயக்க மேதமை.
போரிஸ் காஃப்மேனின் ஒளிப்பதிவு, சிறிய அறையையே மூச்சுத்திணறலான உளவியல் களமாக மாற்றுகிறது. வெளியில் இடியுடன் பெய்யும் மழை, ஜூரிகளின் கொதிக்கும் மனநிலைக்கான காட்சிப்பூர்வ உருவகமாக மாறுகிறது. கார்ல் லெர்னரின் கச்சிதமான படத் தொகுப்பு, படத்தின் வேகத்தை எங்கும் குறைக்காமல், வசனங்களின் வீரியத்தைத் துல்லியமாகக் கடத்துகிறது.
இசையமைப்பாளர் கென்யான் ஹாப்கின்ஸ் பின்னணி இசையை மிகக் குறைவாகவே பயன்படுத்தியிருக்கிறார்; அமைதியும், ரயிலின் இரைச்சலும், மழையின் ஓசையும் பின்னணி இசையாகவே மாறுகின்றன. ஜூரி 8 ஆக, ஹென்றி ஃபோண்டாவின் அமைதியான நடிப்பு திரைப்படத்தின் ஆன்மாவாக விளங்குகிறது.
ஜூரி 3 ஆக நடித்த லீ ஜே. காப், தன் சொந்த மகனின் மீதான கோபத்தைச் சிறுவன் மீது காட்டும் பிடிவாதக்கார தந்தையாக, அசாத்தியமாக நடித்திருக்கிறார். 1 முதல் 12 வரையிலான எண்களால் அழைக்கப்படும் அந்த 12 ஜூரிகளும் உலக சினிமாவின் சிறந்த குழு நடிப்புகளில் ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.
ஒரு மனிதனின் உயிரைத் தீர்மானிக்கும் முன், மனசாட்சியை ஒருமுறையாவது விசாரிக்க வேண்டும் என்பதை உலகுக்குக் கற்றுக்கொடுத்த, இந்த சினிமா காவியத்தை, அவசியம் பார்க்க வேண்டும்.
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com