‘3 இடியட்ஸ்’
‘3 இடியட்ஸ்’ படத்தின் 2-ம் பாகம் திட்டமிட்டப்படி தொடங்கப்படுமா என்பதில் அமீர்கான் மற்றும் மாதவன் பதிலால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவான ‘3 இடியட்ஸ்’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் முடிவில் இருந்து 2-ம் பாகத்தினை ராஜ்குமார் ஹிரானி எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால் விரைவில் இதன் 2-ம் பாகம் அறிவிக்கப்படும் என இணையவாசிகள் உற்சாகமானார்கள்.
தற்போது அதில் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. இந்தி இணையதளம் ஒன்றுக்கு ‘3 இடியட்ஸ்’ 2-ம் பாகம் குறித்து அமீர்கான் மற்றும் மாதவன் இருவருமே கருத்து தெரிவித்துள்ளார். அதில் அமீர்கான், “’3 இடியட்ஸ்’ உருவாகும் போது மகிழ்ச்சியாக இருந்தது. நான் நடித்ததில் ராஞ்சோ கதாபாத்திரம் தான் மிகவும் பிரபலமானது. இப்போது அந்தக் கதாபாத்திரம் குறித்து பேசுகிறார்கள். அதன் 2-ம் பாகத்தில் நடிக்க ஆசை தான். ஆனால், இதுவரை யாரும் என்னை அணுகவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
‘3 இடியட்ஸ்’ 2-ம் பாகம் குறித்து மாதவன், “2-ம் பாகம் என்று கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், அது சாத்தியமில்லை என கருதுகிறேன். எங்கள் மூவருக்குமே இப்போது வயதாகிவிட்டது. 2-ம் பாகத்தில் நாங்கள் எங்கே செல்வோம்? இப்போது எங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பது ஒரு நல்ல சிந்தனை தான். ஆனால் அது 2-ம் பாகத்துக்கு பொருத்தமாக இருக்காது. மீண்டும் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் பணிபுரிய விரும்புகிறேன். அது ‘3 இடியட்ஸ்’ படத்தின் 2-ம் பாகம் என்றால் அது முட்டாள்தனமாக இருக்கும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.