

விஜய் நடித்துள்ள ’ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். ஜன. 9 -ல் வெளியாகும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
மலேசிய நிகழ்ச்சியை முடித்துவிட்டு விஜய், நேற்று முன் தினம் இரவு சென்னை திரும்பினார். அவரை வரவேற்க ரசிகர்கள், தொண்டர்கள் என பலர் திரண்டிருந்தனர். அவர்களுக்கு கைகாட்டிவிட்டு தனது காரில் விஜய் ஏற முயன்றார். அப்போது, அவருடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் முண்டியடித்ததால் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் விஜய் தடுமாறி கீழே விழுந்தார்.
பின்னர், சமாளித்து அவரே எழுந்தார். உடனடியாக அவரை மீட்ட பாதுகாவலர்கள், காரில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.