‘ராமாயணா’ படத்தில் சூர்ப்பனகையாக நடிக்க ஒத்துக்கொண்டது ஏன் என்றும், அந்த கதாபாத்திரம் தன்னை எவ்வாறு கவர்ந்தது என்றும் நடிகை ராகுல் ப்ரீத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
ரசிகர் ஒருவரின் கடிதத்துக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார் ராகுல் ப்ரீத் சிங். அந்த பதிவில் அவர், ‘இந்த அழகான கடிதத்துக்கு நன்றி. நீங்கள் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல சூர்ப்பனகையின் சிக்கலான தன்னமை தான், அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு என்னை சம்மதிக்க வைத்தது.
அவள் வாழ்க்கையின் ஒரு நிகழ்வைத்தான் மீண்டும் மீண்டும் வரலாறு நினைவுகூர்கிறது. ஆனால் அவளின் கதையில் இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு நடிகராக வித்தியாசாமான கண்ணோட்டமுள்ள கதாபாத்திரங்கள் அதிக உற்சாகம் தருபவையாக இருக்கின்றன. ‘ராமாயணா’ திரைக்கு வரும்போது, ரசிகர்கள் திறந்த மனதுடன் சூர்ப்பனகையை கண்டுகொள்வார்கள் என நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
ராமாயணத்தில் ராவணனின் தங்கையான சூர்ப்பனகை, அந்த இதிகாசத்தின் மைய மோதலுக்கு காரணமாகிறாள். ராமன் மீதான தனது காதலை அவள் வெளிப்படுத்தும் போது, அது ராமன், லட்சுமணன் இருவராலும் நிராகரிக்கப்பட, அவள் சீதையை தாக்குகிறாள். ஆத்திரமடையும் லட்சுமணன், சூர்ப்பனகையின் மூக்கை வெட்டிவிடுகிறான். இந்த மனித தன்மையற்ற செயல் ராமனுக்கும் ராவணனுக்குமான போருக்கு வழி வகுக்கிறது.
நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’ படம் அதன் காவிய தன்மை மற்றும் அதில் நடித்திருக்கும் நட்சத்திர பட்டாளத்தால் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.
படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும், ராகுல் ப்ரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம் இந்த தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.