பாலிவுட்

‘முறைகேடுகள் முடிவுக்கு வருவது எப்போது?’ - ஜார்க்கண்ட் மாணவர்களுக்கு ஆதரவாக சோனாக்‌ஷி பதிவு

அனலி

ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் நடத்திய முதன்மைத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள், குளறுபடிகள் நடந்ததாகக் கூறி அம்மாநில இளைஞர்கள் போராடி வரும் நிலையில் அவர்களுக்கு பாலிவுட் நடிகையும், பாஜக முன்னாள் எம்.பி. சத்ருகன் சின்ஹாவின் மகளுமான சோனாக்‌ஷி சின்ஹா ஆதரவு தெரிவித்துள்ளார். சதருகன் சின்ஹா இப்போது திரிணமூல் எம்.பி.யாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட் அரசுப் பணிகள் தேர்வாணையம் நடத்திய தேர்வின் முறைகேடுகள் குறித்து இன்ஸ்டாகிராமில் விளக்கிப் பேசிய இன்ஃப்ளூயன்சர் ஒருவரின் ரீல்ஸை பகிர்ந்த சோனாக்‌ஷி சின்ஹா, “நம் நாட்டில் மாணவர்கள் இப்படி போராட்டத்தில் ஈடுபடுவதைக் காணும்போது மனம் வலிக்கிறது. இவற்றிற்கு எப்போதுதான் முடிவு?” என்று பதிவிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாணவர்கள் ஜெய்ப்பால் சிங் முண்டா மைதானத்தில் ஜூலை 29-ம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏப்ரல் 19-ம் தேதி நடந்த ஜேபிஎஸ்சி 14வது ஒருங்கிணைந்த முதன்மைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது ஓஎம்ஆர் விடைத்தாளில் 5-வதாக விடையளிக்கவில்லை “not attempted” என்றொரு வாய்ப்பையும் அளிக்கும்படி வலியுறுத்துகின்றனர்.

இதற்கிடையில் ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்துக்கு சிஜேபியின் ஆதரவு உண்டு என்று அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே உறுதியளித்துள்ளார். ஜார்க்கண்ட் மாணவர்களுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT