நடிகை ராக்கி சாவந்துக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தி நடிகையான ராக்கி சாவந்த் தொலைக்காட்சி ஒன்றில் ‘ராக்கி கா இன்சாஃப்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்த லட்சுமண் என்ற இளைஞர் தனது மனைவியை கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து இருந்த நிலையில் ராக்கி சாவந்த் நடத்திய நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிகழ்ச்சியின் மூலம் குடும்ப தகராறுக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்பினார். ஆனால், நிகழ்ச்சியில், லட்சுமணை நடிகை ராக்கி அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர், தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் கடந்த 2010-ம் ஆண்டு நடந்தது.
இதுகுறித்து அவருடைய தாயார் சாவித்திரி அளித்த புகாரின் அடிப்படையில் ராக்கி சாவந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் ராக்கி ஆஜராகவில்லை. இதனால், ஜான்சி நீதிமன்றம் அக்.16-ம் தேதி அவருக்கு, ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்தது.
இவ்வழக்கு தொடர்பாக, அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2011-ம் ஆண்டு அனைத்து மேல் நடவடிக்கைகளுக்கும் மறு உத்தரவு வரும் வரை தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில், ராக்கி சாவந்த் மீது பிறப்பிக்கப்பட்டிருந்த ஜாமீனில் வெளிவராத பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.