தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர், இந்தியில் காதல் திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் மவுனி ராய் கதாநாயகியாக நடிக்கிறார். பிரேர்ணா அரோரா தயாரிக்கிறார்.
இப்படம் பற்றி சுரேஷ் கிருஷ்ணா கூறும்போது, “இந்தக் கதையின் மையக் கதாபாத்திரத்துக்குத் தேவையான உணர்ச்சி ஆழத்தை, கண்ணியம், அழகு மற்றும் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தக்கூடிய ஒருவர் தேவைப்பட்டார். நானும் பிரேர்ணாவும் இயல்பாகவே மவுனி ராய்தான் அதற்கான சரியான தேர்வு என்று உணர்ந்தோம்.
அவர் அழகும், நேர்த்தியும் கொண்டவர் மட்டுமல்ல, திறமைமிக்க நடிகையும் ஆவார். அவர் இந்தப் படத்தில் இணைந்ததன் மூலம் இப்படம் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.
தயாரிப்பாளர் பிரேர்ணா அரோரா கூறும்போது, “சுரேஷ் கிருஷ்ணா எனக்கு எப்போதும் பிடித்தமான இயக்குநர்களில் ஒருவர். அவர் கதையை விவரித்ததும் அதை தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். இன்றைய இளைஞர்களுக்கு நெருக்கமான காதல் கதையாக இது இருக்கும்; நிச்சயம் பார்வையாளர்கள் இதனுடன் தங்களை இணைத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.