நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (நவ.27) மறுப்பு தெரிவித்துள்ளது.
நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ படத்தில் இந்திய இதிகாசமான ராமாயணம் திரித்து கூறப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு தலைமை நீதிபதி, “படம் ஏற்கெனவே வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தப் படத்தை பார்க்க விரும்பியவர்கள் எல்லாம் ஏற்கெனவே பார்த்துவிட்டனர்” என்றார்.
தொடர்ந்து, இந்தப் படம் இளம் தலைமுறையினரை பாதிக்கக் கூடிய பல உண்மைக்கு புறம்பான திரிபுகளைக் கொண்டு இருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமர்வு, ‘அவர்களுக்கு புரிந்தபடி அவர்கள் ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். நீங்கள் விரும்பிய படி நீங்கள் ஒரு படத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள். அந்த இதிகாசத்தின் மீது உங்களுக்கு மாற்றுப் பார்வை இருந்தால், அதன் அடிப்படையில் நீங்கள் ஒரு படம் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற மனுவை நிராகரித்தனர்.
இந்திய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு, நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணா’ படம் இரண்டு பாகங்ளாக உருவாகி உள்ளது. இதன் முதல் பாகமான ராமாயணா: ‘ராமாயணா: ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’ படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6 அன்று வெளியானது.
இந்தப் படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்து உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசை அமைத்துள்ள இப்படம் வெளியான 20 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.1,750 கோடி வரை வசூலித்து இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.