பாலிவுட்

‘ராமாயணம்’ முதல் சிங்கிள்: ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் வெளியீடு

ப்ரியா

மும்பை: நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராமாயணம்’ முதல் பாகத்தின் முதல் பாடல், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ஜெய் ஜெய் ராம்’ என்ற இப்பாடலை அர்ஜித் சிங் மற்றும் ஸ்ரேயா கோஷல் இணைந்து பாடியுள்ளனர். டாக்டர் குமார் விஷ்வாஸ் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடல் வீடியோவில் ராமன்-சீதையின் திருமணம், அயோத்தி வீதிகளில் தேரில் வலம் வரும் காட்சிகள் மற்றும் ராமரின் போர்த் திறன்கள் ஆகியவை காட்டப்படுகின்றன. இப்பாடலுக்காக வெளியிடப்பட்ட பிரத்யேக போஸ்டரில், ராமராக நடிக்கும் ரன்பீர் கபூர், சீதையாக நடிக்கும் சாய் பல்லவியின் கூந்தலில் மலர் சூட்டும் காட்சி கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படத்தில் ராவணனாக  யஷ் கம்பீரமான தோன்றுகிறார். மேலும் கைகேயியாக லாரா தத்தா, சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங், மற்றும் சூர்ப்பனகையின் கணவன் வித்யுத்ஜிக்வானாக விவேக் ஓபராய் ஆகியோர் நடித்துள்ளனர். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ராமாயண தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் தசரதராக தோன்றும் நிலையில், அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் பாகம் 2026 அக்டோபரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளன.

SCROLL FOR NEXT