ஏ.ஆர்.ரஹ்மான்
ஆஸ்கர் விருதுபெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறும்போது, ‘‘கடந்த 8 வருடங்களாக இந்தி திரைப்படத் துறையில் இசை அமைக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. இசைத் துறை, இனி இசைக்கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களின் கைகளில் இல்லை. கார்ப்பரேட் கைகளில் உள்ளது. படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதால் பாகுபாடு நிலவுகிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம். இது என் முகத்துக்கு நேராக நடக்கவில்லை என்றாலும், அது போன்ற விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
தென்னிந்தியாவில் இருந்து இந்திக்குச் சென்று நிலைத்து நின்ற முதல் இசையமைப்பாளர் நான்தான். இளையராஜா அங்கு சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். என்னை அவர்கள் ஏற்றுக்கொண்டது திருப்தியான அனுபவமாக இருந்தது. மணிரத்னத்தின் ‘ரோஜா’ (1992), ‘பம்பாய்’ (1995), ‘தில் சே’ (1998) படங்களுக்கு அமைத்த இசை பிரபலமானாலும், சுபாஷ் காய்யின் ‘தால்’ (1999) படம்தான் என்னை வட இந்தியாவில் பட்டிதொட்டியெங்கும் அறிய வைத்தது.
நான் ஒருபோதும் இந்தி பேசியதில்லை. தமிழுடன் எங்களுக்கு அப்படி ஒரு பிணைப்பு இருக்கிறது. ஆனால் அப்போது சுபாஷ் காய், ‘உங்கள் இசை எனக்கு மிகவும் பிடிக்கும், நீங்கள் இங்கு நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறினார். அவரிடம் நான், இந்தி இசைக்குத் தாயாக விளங்கும் உருது கற்றுக்கொள்கிறேன் என்றேன். இவ்வாறு ரஹ்மான் கூறியிருந்தார்.
இதில் பாலிவுட்டில் மத பாகுபாடு இருப்பதாகஅவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பிரபல பாடகர்கள் ஷான், சங்கர் மகாதேவன், ஹரிஹரன், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் உள்ளிட்டோர் மறுத்துள்ளனர்.
ஷான் கூறும்போது, “இந்தி சினிமாவில் மத ரீதியான விஷயஙகள் இருப்பதாக நினைக்கவில்லை.கடந்த 30 ஆண்டுகளாகச் சிறுபான்மையினராக இருக்கும் நமது மூன்று (சல்மான், ஷாருக்கான், ஆமிர்கான்) சூப்பர் ஸ்டார்களின் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கூறும்போது, “நான் அப்படி உணர்ந்ததில்லை. மத ரீதியான பிரச்சினை இருப்பதாக நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். இவர்களைப் போலவே பலரும் தெரிவித்துள்ளனர்.