சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம், ‘த கேரளா ஸ்டோரி’. இந்தப் படத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் இந்தப் படம் தடை செய்யப்பட்டது. இப்போது ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என்ற பெயரில் அதன் அடுத்த பாகம் உருவாகி இருக்கிறது.
பிப்.27-ல் வெளியாக இருக்கும் இதை கமக்யா நாராயண் சிங் இயக்கி உள்ளார். விபுல் ஷா தயாரித்துள்ளார். உல்கா குப்தா, அதிதி பாடியா, ஐஸ்வர்யா ஓஜா முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இதன் டிரெய்லரில் இந்துப் பெண்களை மதம் மாற்றுவது, கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் கடுமையாகச் சாடியிருந்தார்.
“இதன் டிரெய்லரில் காட்டுவதைப் போல யாராவது அப்படி மாட்டிறைச்சி யை ஊட்டுவார்களா? கிச்சடியைக் கூட அப்படி ஊட்டமாட்டார்கள். அது முட்டாள்தனமான படம். இந்தப் படத்தின் நோக்கம், மக்களிடையே பிரிவினையை உருவாக்கி பணம் சம்பாதிப்பதுதான். தயாரிப்பாளர் பேராசைக்காரர்” என்றார்.
இந்நிலையில், இதற்குப் படத்தின் இயக்குநர் கமக்யா நாராயண் சிங் பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “அனுராக் சொன்னதுபோல, ஒருவருக்கு யாரும் அப்படி கிச்சடி கூட ஊட்டுவதில்லை.
ஒப்புக்கொள்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நம் சமூகத்தில், மத மாற்றத்துக்காகக் கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி ஊட்டப்படுகிறதே. இது குற்றம்தான். பிரச்சினை என்னவென்றால், அனுராக் காஷ்யப் மனரீதியாகப் பலவீனமாகிவிட்டார்; அவருக்கு எல்லாவற்றிலும் பிரச்சினை இருக்கிறது.
அவருக்குப் புத்தியை வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ள அவர், ``ஒரு படம் கட்டாய மத மாற்றம் அல்லது ஏதாவது ஒரு விஷயத்தில் அழுத்தம் பற்றிப் பேசினால், அது வெறுப்பு படம் என்று முத்திரை குத்தப் படுகிறது. எந்தவொரு விவாதமும் தனிப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.