பெண் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆசை இருப்பதாக நடிகை கீர்த்தி சனோன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கிரே ஷேடு என்கிற சிக்கலான மனநிலை கொண்ட ஒரு கதாபாத்திரத்தின் ஆழத்தை ஆராய்ந்து நடிக்க விரும்புகிறேன். ஒரு நடிகையாக, நிஜ வாழ்க்கையில் நான் இல்லாத, முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை இது வழங்கும். ஒரு பெண் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஆசை இருக்கிறது. இந்தியாவில் இந்தியில் உருவான ‘கிரிஷ்’ மட்டுமே சூப்பர் ஹீரோவாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ‘சக்திமானும்’ இருக்கிறார். ஆனால் அவர்கள் ஆண்கள்.
ஒரு பெண் சூப்பர் ஹீரோவும் இருக்க வேண்டும். அதை என்னால் சிறப்பாகச் செய்ய முடியும் என நம்பு கிறேன். ஆக் ஷன் காட்சிகளில் நடிக்கவும் எனக்கு விருப்பம். சூப்பர் ஹீரோ கதையையும் ஆக் ஷனையும் இணைத்தால் அது சுவாரஸ்யமாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, இந்திய சினிமாவில் பெண் கதாபாத்திரங்களுக்காக எழுதப்படும் கதைகள் தற்போது வலுவாக மாறி வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.