போபால்: தீபாவளி பண்டிகையையொட்டி குர்ஆன் வசனம் பொறிக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான மரகத நெக்லஸ் அணிந்திருந்த விவகாரத்தில், நடிகை கரீனா கபூருக்கு இந்து உத்சவ் சமிதி அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. கரீனா கபூர் யாருக்கும் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்று அந்த மைப்பின் தலைவர் சந்திர சேகர் திவாரி கூறியுள்ளார்.
தீபாவளி கொண்டாட்டத்தின் போது வெள்ளி நிற ஆடை மற்றும் தலைப்பாகையுடன், போபால் அரச குடும்பத்தின் பாரம்பரிய 30 காரட் மரகத நெக்லஸ் அணிந்த புகைப்படங்களை கரீனா கபூர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். அப்பதக்கத்தில் திருக்குர்ஆனின் ‘ஆயத்துல் குர்ஸி’ என்ற வசனம் பொறிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் குர்ஆன் வசனம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி, மத்தியப் பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் என்பவர் கரீனா கபூர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ரியா கபூர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அந்தப் புகைப்படங்களை நீக்குவதுடன், பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த சர்ச்சைக்குப் பதிலளித்துள்ள போபாலைச் சேர்ந்த இந்து உத்சவ் சமிதியின் தலைவர் சந்திர சேகர் திவாரி, கரீனா கபூர் கழுத்தில், இதயத்திற்கு நெருக்கமாகவே அப்பதக்கத்தை அணிந்திருந்தார் என்றும், அவமதிக்கும் வகையில் அவர் எதையும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், போபால் அரச குடும்பத்தின் மருமகள் என்ற முறையில், குடும்பப் பாரம்பரிய நகைகளை அணியும் உரிமை கரீனா கபூருக்கு இயல்பாகவே உள்ளது என்றும், இந்து உத்சவ் சமிதி மற்றும் சன்ஸ்கிருதி பச்சாவ் மன்ச் ஆகிய அமைப்புகள் அவருக்குத் துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.