புதுடெல்லி: ஜென் ஸீ தலைமுறை இளைஞர்களை "சாக்கடை தலைமுறை" என்று கடுமையாக விமர்சித்து வந்த நடிகையும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத், தற்போது தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிக் கொண்டு இளைஞர்களே நாட்டின் மிகப் பெரிய பலம் என்று பாராட்டியுள்ளார்.
முன்னதாக, டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களின் நடத்தை, ஆடைகள் மற்றும் மொழியைக் குறிப்பிட்டு, "அரைகுறை மேல்நாட்டுச் சிந்தனையைக் கொண்ட இவர்களை சாக்கடை தலைமுறை என்றுதான் சொல்வேன். இவர்களின் பதிவுகள் அருவருப்பைத் தருகின்றன" என சமூக வலைதளங்களில் கடுமையாகச் சாடியிருந்தார் கங்கனா. அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, "ஜென் ஸீ இளைஞர்கள் தான் நமது நாட்டின் உண்மையான வலிமை. நமது தேசத்திற்கு அவர்கள் ஒரு பெரிய சொத்து. நமது கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் உலகுக்கு எடுத்துரைக்கும் தூதர்களாக அவர்கள் உருவெடுத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் வழிகாட்டுதலையும் அனுபவத்தையும் கேட்டுப் பயன்பெறும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. நாட்டின் இளைஞர்கள் நமது கலாச்சார அடையாளத்தோடு ஒன்றிணைவது பெருமைக்குரியது" என்று கூறினார்.
முன்னதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், "போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் தேசவிரோதிகள் அல்ல; அவர்களை அன்போடு அரவணைத்துப் பேச வேண்டும்" என்று தெரிவித்த மறுநாளே கங்கனா தனது கருத்தை முற்றிலும் மாற்றிப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் போராட்டங்களில் ஈடுபடும் ஒருசில நபர்களின் தவறான நடவடிக்கைகளுக்காக ஒட்டுமொத்த ஜென் ஸீ தலைமுறையையும் குறை சொல்லக் கூடாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.