நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணா’ திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் ரன்பீர்கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். ராவணனாக யாஷ் நடித்துள்ளார்.
பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தின் முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு நவ.5-ம் தேதி வெளியாகிறது. 2-ம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் வெளியீடு தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது.
ராவணன் தொடர்பான காட்சிகள் 2-ம் பாகத்தில்தான் அதிகம் இடம்பெற உள்ளது. அப்போது நடக்கும் போர்க் காட்சிகளை மிகவும் பிரம்மாண்டமாக, இதுவரை உருவாக்காத வகையில் படமாக்க தயாரிப்பாளர் நமித் மல்ஹோத் ராவும் இயக்குநர் நிதேஷ் திவாரியும் முடிவு செய்துள்ளனர்.
உலகத் தரத்திலான மிகச் சிறந்த மற்றும் தனித்துவமான காட்சிகளாக அது இருக்க வேண்டும் என்று நினைப்பதால் அதன் படப்பிடிப்புக்காக இன்னும் சில காலம் தேவைப்படுகிறது என்றும் அதனால் 2-ம் பாகத்தின் ரிலீஸ் தேதியை 2028-ம் ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.