இந்தாண்டின் முதல் 6 மாதங்களில் இந்திய திரைப் படங்களின் மொத்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.6,398 கோடியை எட்டியுள்ளது.
கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு இந்திய திரைப்படங்களின் வசூல் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. இந்த 2026-ம் வருடத்தின் முதல் அரையாண்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய பாக்ஸ் ஆபீஸ் வசூல் அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் ஜுன் மாதம் வரை ரூ.6,398 கோடி வசூலை இந்திய சினிமா எட்டியுள்ளது.
இது, 2025ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் வசூலித்ததை விட சுமார் ரூ.650 கோடி அதிகம். கரோனாவுக்குப் பிறகு முதல் அரையாண்டில் கிடைத்துள்ள அதிகபட்ச வசூல் இது. இந்தக் கணக்கில் வெளிநாட்டு வசூல் விவரங்கள் சேர்க்கப்படவில்லை. இந்த வசூலுக்கு இந்தி திரைப்படங்களான ‘துரந்தர் 2’ (ரூ.1,277 கோடி), ‘பார்டர் 2’ (ரூ.379 கோடி), தெலுங்கு படங்களான ‘மன சங்கர வர பிரசாத் காரு’ (ரூ.255 கோடி), பெத்தி (ரூ.232 கோடி), தமிழில் வெளியான ‘கருப்பு’ (ரூ.229 கோடி) உள்ளிட்ட திரைப் படங்கள் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
குறிப்பாக ‘துரந்தர் 2’ இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் சாதனை படமாக அமைந்தது. முதல் அரையாண்டின் மொத்த இந்திய பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சுமார் 20 சதவிகிதத்தை இப்படம் மட்டுமே வழங்கியுள்ளது. அதிக வசூல் செய்த முதல் 15 படங்கள், மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 58 சதவிகிதத்தைப் பெற்றுள்ளன. 2025ம் ஆண்டின் முதல் அரையாண்டில் இந்தப் பங்கு 49 சதவிகிதம் மட்டுமே இருந்தது. இந்தக் காலகட்டத்தில், திரையரங்குகளுக்கு வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
2025-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் 36.2 கோடியாக இருந்த பார்வையாளர் வருகை, 2026-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் 37.8 கோடியாக உயர்ந்து, 5 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம், தொடர்ந்து 3 ஆண்டுகளாக நீடித்த சரிவு மற்றும் தேக்கநிலைக்கு முடிவு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், 2022-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 2’, ‘ஆர்ஆர்ஆர்’ வெளியானபோது பதிவான 40 கோடி பார்வையாளர்கள் என்ற சாதனையை இன்னும் எட்டவில்லை.
திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் அதிக அளவில் மீண்டும் வரத் தொடங்கியிருப்பதும், பெரிய படங்களுடன் நடுத்தர பட்ஜெட் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதும் இந்திய பாக்ஸ் ஆபிஸ் மீண்டும் ஆரோக்கியமான பாதையில் செல்ல காரணமாகி இருக்கிறது. முதல் அரையாண்டை போல 2-ம் பாதியிலும் இந்த வளர்ச்சி தொடரும் என்று திரையுலகினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். அப்படித் தொடர்ந்தால் இந்த ஆண்டின் மொத்த இந்திய பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரூ.15 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.
அது நடந்தால், ரூ.13,395 கோடி என்ற கடந்த ஆண்டின் வசூல் சாதனை முறியடிக்கப்படும். இந்த வருடத்தின் 2ம் பாதியில் எதிர்பார்க்கப்படும் படங்களாக, ‘ராமாயணம்: பகுதி 1’, ஷாருக்கானின் ‘கிங்’, யாஷின் ‘டாக்ஸிக்’, பிரபாஸின் ‘ஃபவுஸி’, ரஜினியின் ‘ஜெயிலர் 2’, விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்தப் படங்கள் வெற்றி பெற்றால், 2026ம் ஆண்டில் திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்த்த மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது. கரோனா காலகட்டத்துக்குப் பிறகு இதுவரை எந்த ஆண்டும் அந்த இலக்கை எட்டவில்லை.