இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இந்தியா முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள அவர், சவுதி அரேபியாவில் நடக்கும் ரெட் சீ சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “நான் மிகச் சிறந்த நடிகன் என்று நினைக்கவில்லை. நான் வேறு எதைச் செய்தாலும் நீங்கள் அதைக் கண்டு
பிடிக்கலாம், ஆனால் நடிப்பதைக் கண்டுபிடிக்க முடியாது. என்னால் அது முடிவதில்லை. படப்பிடிப்பின்போது எனக்கு எப்படி உணர்வு தோன்றுகிறதோ, அப்படியே செய்கிறேன். அவ்வளவுதான்” என்றார்.
உடனே நிகழ்ச்சி தொகுப்பாளர் ரசிகர்களிடம், அவர் சொல்வது உண்மையா? என்று கேட்டார். ரசிகர்கள் மறுத்தனர். அவர் சிறந்த நடிகர்தான் என்றனர்.
அடுத்து பேசிய சல்மான் கான், “சில படங்களில் நான் அழும்போது, நீங்கள் என்னைப் பார்த்துச் சிரிப்பதாக எனக்குத் தோன்றுகிறது” என்றார். உடனடியாக ரசிகர்கள், “இல்லை, நாங்களும் உங்களுடன் சேர்ந்து அழுகிறோம்” என்றனர். இதைக் கேட்டதும் சல்மான் கான் புன்னகை செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.