ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை.
98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மார்ச் 15-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக இறுதித் திரைப்பட பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படம் இறுதிப் பட்டியலில் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதில் ரியான் கூக்லர் இயக்கிய ஹாலிவுட் படமான ‘சின்னர்ஸ்’ திரைப்படம் 16 பரிந்துரைகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் அகாடமி விருது வரலாற்றில் அதிக பரிந்துரைகளைப் பெற்றதாக இப்படம் மாறியுள்ளது. முன்பு ‘ஆல் அபவுட் ஈவ்’ (1950), ‘டைட்டானிக்’ (1997), ‘லா லா லேண்ட்’(2016) ஆகிய படங்கள், 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
மைக்கேல் பி ஜோர்டான் 2 வேடங்களில் நடித்துள்ள மியூசிக்கல் த்ரில்லர் படமான ‘சின்னர்ஸ்’, 1930-களில் அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் நிலவிய இனவெறி பின்னணியில் ரத்தம் குடிக்கும் டிராகுலாவை மையப்படுத்திய கதையைக் கொண்டது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 16 பிரிவுகளில் இந்தப் படம் போட்டியிடுகிறது.