துருவா சர்ஜா நடித்துள்ள பான் இந்தியா படம்,‘கேடி: தி டெவில்’. பிரேம் இயக்கியுள்ள இப்படத்திலிருந்து சமீபத்தில் பாடல் ஒன்று வெளியானது. அதில் நோரா ஃபதேஹி, சஞ்சய்தத் நடித்துள்ளனர்.
பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே, அதன் வரிகள் மற்றும் நடன அசைவுகள் ஆபாசமாக இருப்பதாகக் கூறி கடும் கண்டனங்கள் எழுந்தன. தேசிய மனித உரிமைகள் ஆணையம் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியது. போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது.
அனைத்திந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் இப்பாடலைக் கண்டித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மற்றும் தணிக்கை வாரியத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில், இந்தப் பாடலை அனைத்து தளங்களில் இருந்தும் நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும் விளம்பரத்துக்காக வேண்டுமென்றே சர்ச்சையை உருவாக்குகிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில், இந்தி திரையுலகம் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டது என்று நடிகையும் எம்.பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “ஆபாசம் மற்றும் கவனத்தை ஈர்க்கும் செயல்களில் பாலிவுட் அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டது.
ஒட்டுமொத்த நாடும் அவர்களைக் கண்டித்து வருகிறது. ஆனால் அவர்களுக்குச் சிறிதும் வெட்கம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இத்தகைய ஆபாசமான, அருவருப்பான காட்சிகளைத் திரையிடுவதில் இன்னும் கடுமையான விதிகள், கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.