ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்துள்ள இந்தித் திரைப்படம், ‘துரந்தர்’. ‘உரி’: தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ என்ற படத்தை இயக்கிய ஆதித்யா தார் இயக்கி உள்ள ‘ஸ்பை த்ரில்லர்’ படம் இது.
ஹம்சா என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் உளவாளியாகச் செல்லும் ரன்வீர் சிங், இந்தியாவுக்கு எதிரான சதித் திட்டங்களைக் கண்டுபிடித்து எப்படி முறியடிக்கிறார் என்பது இதன் கதை. இந்த மூன்றரை மணி நேரப் படம், வெளியான நாளிலிருந்து வசூலில் மிரட்டி வருகிறது. இப்படம் வெளியான 21 நாள் வரை ரூ.1,006 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தை முந்தி முதலிடத்தில் துரந்தர் இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் 2-ம் பாகத்தைப் படக்குழு உடனடியாக அறிவித்துள்ளது. அது அடுத்த வருடம் மார்ச் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதை, ஒரே நேரத்தில் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியிடத் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.