Stranger Things S5 Vol 2: மிரட்டும் இறுதி கட்டம் எப்படி? | ஓடிடி திரை அலசல்

Stranger Things S5 Vol 2: மிரட்டும் இறுதி கட்டம் எப்படி? | ஓடிடி திரை அலசல்
Updated on
1 min read

நெட்ஃப்ளிக்ஸின் பிரம்மாண்ட படைப்பான 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள சீசன் 5-ன் இரண்டாவது பகுதியில் மொத்தம் மூன்று எபிசோடுகள் வெளியிடப்பட்டுள்ளன.

முந்தைய பகுதியின் முடிவில் வில் பையர்ஸ் தனக்குள் இருந்த சக்திகளை வெளிப்படுத்திய நிலையில், இந்த பகுதி அங்கிருந்தே தொடங்குகிறது. ஹாக்கின்ஸ் நகரம் முற்றிலும் தலைகீழ் உலகத்தால் (அப்சை டவுன்) ஆக்கிரமிக்கப்பட்டு, ஒரு போர்க்களம் போல மாறியுள்ளது. முக்கிய வில்லன் வெக்னா 12 சிறுவர்களைக் கடத்திச் சென்று, அவர்களை ஒரு மர்மமான இடத்தில் சிறைவைத்துள்ளார். அந்த சிறுவர்கள் மீட்கப்பட்டார்களா? உண்மையில் இந்த அப்சைட் டவுன் என்றால் என்ன? போன்றவற்றை பரபரப்பாக சொல்கிறது இந்த இறுதிப் பகுதி.

முந்தைய பகுதியைப் போலவே இதிலும் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் டஃபர் சகோதரர்கள். குறிப்பாக நான்சி, ஜானதன் இடையிலான உரையாடல், ஸ்டீவ், டஸ்டின் இடையிலான காட்சிகள் கண்கலங்க வைக்கின்றன. அதிலும் தன்னுடைய அடையாளத்தை தன் தாய் மற்றும் நண்பர்கள் மத்தியில் வில் பையர்ஸ் வெளிப்படுத்தும் காட்சி நெஞ்சை தொடுகிறது. மேக்ஸ் மற்றும் ஹாலி வீலர் இருவரின் கூட்டணி இந்த சீசனின் சிறப்பம்சமாகும். வெக்னாவின் பிடியில் இருக்கும் இவர்கள் இருவரும் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுள்ளன.

டஃபர் சகோதரர்கள் இந்த மூன்று எபிசோடுகளையும் சினிமாவுக்கு நிகரான தரத்தில் உருவாக்கியுள்ளனர். ஒவ்வொரு எபிசோடும் ஒரு மணிநேரத்திற்கும் மேல் செல்கிறது. காட்சிகளின் பிரம்மாண்டத்தை விடவும், கதாபாத்திரங்களின் ஆழம் மற்றும் அவர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதில் படக்குழு அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாத கதாபாத்திரம் என்றால் அது இதுவரை பிரதான கதாபாத்திரமாக இருந்து வந்த மைக் வீலர்தான். அவருக்கானக் காட்சிகளை இன்னும் அழுத்தமாக்கி இருக்கலாம்.

தொடங்கியது முதல் எங்கும் நிற்காமல் பரபரவென்று செல்லும் இந்த இறுதி எபிசோடுகள், இன்னும் மீதி இருக்கும் ஒரே ஒரு எபிசோடுக்கான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக ஏற்றிவிடுகின்றன. அந்த இறுதி எபிசோடில் இன்னும் பல ரகசியங்கள் வெளிப்படலாம். அத்துடன் கடந்த 9 ஆண்டு காலமாக உலகம் முழுவதும் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த இந்த ‘ஹாக்கின்ஸ்’ உலகம் முடிவுக்கு வந்து விடும்.

ஒட்டுமொத்தமாக,இந்த பகுதி அதிரடி ஆக்‌ஷன் தொடராக மட்டுமல்லாமல், உணர்ச்சிகரமான பயணமாக அமைந்துள்ளது. மர்மங்கள் விலகி, இறுதி யுத்தத்திற்கான களம் இப்போது முழுமையாகத் தயாராகிவிட்டது. ஜனவரி 1 புத்தாண்டு அன்று வெளியாகவிருக்கும் கடைசி அத்தியாயம் நெட்ஃப்ளிக்ஸ் படைப்புகளில் மிகச்சிறந்த கிளைமாக்ஸ்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Stranger Things S5 Vol 2: மிரட்டும் இறுதி கட்டம் எப்படி? | ஓடிடி திரை அலசல்
‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ கதைக்களம் கவர்ந்து இழுப்பது ஏன்? - Decoding ‘Stranger Things’ 1

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in