பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் விக்ரம் பட். இவர், குலாம், பம்பாய் கா பாபு, ராஸ், 1920 உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் மற்றும் இவருடைய மனைவி ஸ்வேதாம்பரி பட் உள்ளிட்ட 6 பேர் மீது, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் டாக்டர் அஜய் முர்தியாவால் என்பவர், ரூ.30 கோடி மோசடி செய்ததாக அளித்த புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
திரைப்படங்களில் முதலீடு செய்வதற்காக வாங்கிய பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் அதில் மோசடி நடந்திருப்பதாகவும் கூறியிருந்த வழக்கில் போலீஸார் அவர்களைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது சிறையில் இருக்கும் அவர் மற்றும் அவருடைய மகள் கிருஷ்ணா மீது, மற்றொரு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம், சினிமாவில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ.13.5 கோடியை, விக்ரம் பட் மற்றும் அவர் மகள் கிருஷ்ணா பட் பெற்றதாகவும் அதைத் திருப்பித் தரவில்லை என்றும் வெர்சாவா போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.