கோப்புப் படம்
பாலிவுட்டில் கேமராவுக்கு பின்னால் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமைகளைச் சீரமைக்கவில்லை என்றால் ஒட்டுமொத்தத் திரையுலகமும் முடங்கும் என மேற்கிந்திய திரைப்பட தொழிலாளர்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.என்.திவாரி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “குறைந்த வேலைவாய்ப்புகள், ஊதியம் தாமதமாவது, அதிகமான வேலை நேரம் போன்றவற்றால் திரைப்பட தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது பல ஓடிடி தளங்கள் வந்துவிட்டன, தரத்துக்கு முக்கியத்துவம் தராமல் வெறும் எண்ணிக்கையை மட்டுமே பலரும் எதிர்பார்க்கிறார்கள். இதனால் லைட் மேன், கலை இயக்குநர்கள், துணை நடிகர்கள் உள்பட தினசரி ஊதியம் வாங்கும் திரைப்படத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
சில நேரங்களில் 20 மணி நேரம் வரை வேலை வாங்குகிறார்கள். ஆனால், அவர்களுக்கு 8 மணி நேரத்துக்கான ஊதியம் கூட சரியாக வழங்கப்படுவதில்லை. ஓடிடி நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் படங்களில் பணியாற்றுபவர்களுக்கு மாதக்கணக்கில் ஊதியம் தாமதமாகிறது. இந்நிலை தொடர்ந்தால், ஒட்டுமொத்தத் திரைப்படத் துறையும் ஒரு நாள் முடங்கும். தொழிலாளர்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள்” என்று எச்சரித்துள்ள திவாரி, அவர்களுக்கு நீதி கிடைக்கத் தங்களது கூட்டமைப்பு தொடர்ந்து முயன்று வருவதாகக் கூறினார்.