புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரத்துக்காக ரூ.40 கோடி தருவதாகக் கூறியும் அதை நிராகரித்ததாக நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டி, தமிழில் ரஜினியின் ‘தர்பார்’, 12 பி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், நேர்மையும் குடும்பத்தின் கொள்கைகளும் பணத்தை விட முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, “புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரத்துக்காக என்னை அணுகினர். ரூ.40 கோடி தருவதாகக் கூறினர். அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என்கிற கொள்கைக்காக மறுத்துவிட்டேன். இப்போது அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க என்னை யாரும் அணுகுவதில்லை. சில கோடி ரூபாய்களுக்காக என் லட்சியங்களில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன்.
2017-ம் ஆண்டு எனது தந்தையின் மரணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. 6 முதல் 7 வருட இடைவெளிக்குப் பிறகு நடிப்புக்கு மீண்டும் திரும்புவது சவாலானது. சினிமாவில் இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. அந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள எனக்கு நேரம் எடுத்துக் கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.