நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணா’ திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். ராவணனாக யாஷ் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் நவ.5-ல் வெளியாகிறது.
இதன் பாடல் வெளியீட்டை அமேசான் மியூசிக் சென்னையில் நடத்தியது. தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனது இசைக்குழுவினருடன் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் பாடல்களைப் பாடினார்.
பின்னர் அவர் பேசும்போது, “பள்ளியில் நான் பார்த்த ராமாயணம், நாடகங்களில் பார்த்த ராமாயணம், அப்புறம் லங்கேஸ்வரன், இப்போது இந்த ராமாயணம் என இந்தப் பயணத்தில் அதிகம் கற்றுக்கொண்டேன். பெற்றோரிடம், குழந்தைகளிடம், மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ராமாயணம் சொல்கிறது.
இன்றைய உலகிற்கு இது அவசியமானது. நியூயார்க்கைச் சேர்ந்த சதீஷ் என்ற என்பவர் 2014-ல் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ‘ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உலகெங்கும் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை உருவாக்குவீர்கள்’ என்று அவர் கனவில் கண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
எனக்கு அதிர்ச்சி, 2026-ல் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதைப் பற்றி 2014-ல் ஒருவரால் எப்படி கனவு காண முடிந்தது என்று வியந்தேன். அதனால் தான் இதைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். இந்தப் படத்துக்காக ஹான்ஸ் ஜிம்மருடன் இணைந்து இசையமைத்தது மறக்க முடியாத நிகழ்வு” என்றார்