பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தற்போது ‘கல்கி 2898 ஏடி: பார்ட் 2’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சியில் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தனது தந்தையும் பிரபல இந்தி கவிஞருமான டாக்டர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் நினைவாக, அயோத்தியில் தர்மசாலா கட்டத் திட்டமிட்டுள்ளார். இதில் 20-க்கும் மேற்பட்ட அறைகள் இடம்பெற உள்ளன. பக்தர்கள் தங்குவதற்கும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் இந்த இடம் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த தர்மசாலா, அயோத்தியின் தசரத் பாத் பகுதியில் உள்ள தி சரயு திட்டத்தின் கீழ் அமிதாப் பச்சன் வாங்கிய நிலத்தில் அமைய உள்ளது. ரூ.15 கோடி மதிப்பில் இந்த நிலத்தை வாங்கியிருந்தார் அவர். இதற்கான கட்டிட வரைபட அனுமதிக்காக அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப் பட்டுள்ளது. அனுமதி கிடைத்த பின் அக்டோபரில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.