நடிகை பிரீத்தி ஜிந்தா
இந்தி நடிகையான பிரீத்தி ஜிந்தா, தனது பெயர் மற்றும் உருவத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் போலி டிஜிட்டல் உள்ளடக்கங்களை அகற்றக் கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அவை தனது தனிநபர் உரிமை மற்றும் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தன்னுடைய மனுவில் கூறியிருந்தார். இவ்வழக்கு நீதிபதி மாதவ் ஜம்தார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பிரீத்தி ஜிந்தா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வெங்கடேஷ் தோண்ட், அனுமதியின்றி பதிவேற்றப்பட்ட உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த கூகுள் மற்றும் மெட்டா தரப்பு, “மனுதாரர் சுட்டிக்காட்டும் இணைப்புகளை அகற்றுவதில் ஆட்சேபனை இல்லை; ஆனால் அனைத்து இணைப்புகளையும் ஒரே உத்தரவின் கீழ் நீக்க முடியாது; அவற்றில் சில சட்டபூர்வமான உள்ளடக்கங்களாக இருக்கக்கூடும்” என்று தெரிவித்தது.
இதையடுத்து, உரிமை மீறும் பதிவுகள் மட்டும் நீக்கப்பட்டு, சட்டபூர்வமான உள்ளடக்கங்கள் பாதிக்கப்படாத வகையில் செயல்படக்கூடிய நடைமுறையை உருவாக்குமாறு நீதிபதி அனைத்து தரப்புகளுக்கும் அறிவுறுத்தினார். வழக்கின் அடுத்த விசாரணையை 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.