புதுடெல்லி: ‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’ என புற்றுநோய் கண்டறியப்பட்ட தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கமாக பேசியுள்ளார்.
இந்தியத் திரையுலகில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா. திரைத்துறையில் மட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டு வந்து, பலருக்கு ஊக்கமளிக்கும் ஒரு தன்னம்பிக்கை நாயகியாகவும் திகழ்கிறார்.
2012-ல், மனிஷா கொய்ராலாவுக்கு நான்காம் நிலை கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருக்கு 11 மணி நேர அறுவை சிகிச்சை மற்றும் பல சுற்று கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஓராண்டு கழித்து, 2013-ல், அவர் அந்த நோயை வென்றார். அன்று முதல், தனது குணமடைதல் பயணம் மற்றும் வாழ்க்கை மீதான புதிய கண்ணோட்டம் குறித்து வெளிப்படையாகப் பேசி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பிரபல டிஜிட்டல் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் மனிஷா கொய்ராலா கூறும்போது, “பகலில் எனக்குப் புற்றுநோய் இருப்பதாகச் சொன்னார்கள். அந்த இரவு, எனக்கு மிகவும் தனிமையான மற்றும் நீண்ட இரவாக இருந்தது. அது ஒரு இருண்ட வெளியைப் போல உணர்ந்தேன். ‘நான் இறந்துவிடுவேன்’ என்று உணர்ந்தேன்.
எனக்குப் புற்றுநோய் வந்தபோதுதான், ஒரு நோயாளி எவ்வளவு தனிமையாக உணர்வார் என்பதை நான் உணர்ந்தேன். சில நேரங்களில், தனிமை உங்களுக்குப் பழகிவிடும். வாழ்க்கை என்பது பலவிதமான அடுக்குகளின் கலவை, ஆனால் ஒரு கூட்டத்தின் மத்தியிலும் தனிமையை உணருவது என்பது விவரிக்க முடியாத கொடூரம். அந்தக் காலகட்டம், நான் அனுபவித்ததிலேயே மிகவும் கொடூரமான மற்றும் பயங்கரமான நேரம்” என்றார்.
ஜென்ஸி தலைமுறையினருக்கு...
சமீபத்தில் காத்மாண்டுவில் நடைபெற்ற மாநாட்டில் மனிஷா கொய்ராலா, “இளம் தலைமுறையினரின் ஆற்றலை நான் ஆதரிக்கிறேன். ஊழலுக்கு எதிராக அவர்கள் எழுந்து நின்றதை நான் ஆதரித்து வணங்குகிறேன்” என்றார். மனிஷா நேபாளத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கொய்ராலா குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் இவரது தாத்தா பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா நேபாளத்தின் பிரதமராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.