பாலிவுட்

“தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது” - நடிகை அனன்யா ராஜ் மரணம் குறித்து குடும்பத்தினர் உருக்கம்

ப்ரியா

நடிகை அனன்யா ராஜ் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ‘7 ஹவர்ஸ் டு கோ’, ‘தி ஃபைனல் எக்ஸிட்’, ‘கோஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்திருந்த அவருக்கு வயது 35.

இந்தத் தகவலை அனன்யாவின் குடும்பத்தினர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம்  மூலமாக தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள், ‘நாங்கள் அனன்யாவின் குடும்பத்தினர். மிகுந்த வலியுடன் இந்த தகவலைத் தெரிவிக்கிறோம். ஜூலை 15-ம் தேதி அதிகாலையில் அனன்யா உயிரிழந்தார். தூக்கத்திலேயே அமைதியாக அவரது உயிர் பிரிந்தது.

கடந்த சில வருடங்களாக அவர் மனரீதியான, உடல் ரீதியான பிரச்சினைகளுடன் போராடி வந்தார். அதிலிருந்து மீண்டு வர ஒரு வீராங்கனையைப் போல அவர் போராடினார்.

மன உறுதி மிக்க பெண்ணான அவர் ஒரு ராணியைப் போல வாழ்ந்தார். மகளே... உன் வெறுமையை வெகுவாக உணருகிறோம்.

அவரது ஆன்மா சாந்தியடைய நீங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். இக்கட்டான இந்தச் சூழலில், நாங்கள் அமைதியையும், தனிமையும் வேண்டுகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

கடந்த 1991, அக்டோபர் 22-ம் தேதி பிறந்த அனன்யா ராஜ், இந்தி மற்றும் பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். 2016-ல், ‘7 ஹவர்ஸ் டு கோ’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அனன்யா அறிமுகமானார்.

அனன்யாவின் மரண செய்தியை அவரின் குடும்பத்தினர் உறுதி செய்ததைத் தொடர்ந்து, அவரது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. மே 17-ம் தேதி வெளியிட்டுள்ள அந்தப் பதிவில் அவர், ‘கருப்பில் இருந்து வெள்ளைக்கு. இது மின்னுவதற்கான நேரம்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், கருப்பு உடையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

SCROLL FOR NEXT