பிரபல பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றை ரூ.1 கோடி செலவில் மேம்படுத்தியுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு, எல்லைப் பாதுகாப்புப் படையின் அழைப்பின் பேரில் காஷ்மீர் எல்லைப் பகுதிக்கு அக் ஷய் குமார் சென்றிருந்தார். அங்குள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, குரேஸ் பள்ளத்தாக்கின் நெரோ துலைல் கிராமத்துக்குச் சென்றார். அங்குள்ள அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடியபோது, அவர்களின் கல்வித் தேவைகளையும் பள்ளியின் நிலையையும் கண்டு உடனடியாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார். அதன்படி அவர் அளித்த நிதியுதவியைக் கொண்டு, பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளனர்.
புதிய வகுப்பறைகள், கணினி ஆய்வகம், நூலகம் மற்றும் ஆசிரியர்களுக்கான அலுவலக அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளது. அக் ஷய் குமார் தனது மறைந்த தந்தை ஹரி ஓம் பாட்டியாவின் நினைவாக, இந்தப் புதிய பள்ளி கட்டிடத்துக்கு ‘ ஹரி ஓம் பாட்டியா கல்வி வளாகம்’ என்று பெயரிட்டுள்ளார். அக்ஷய் குமாரின் இச் செயலை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.