நடிகை தீபிகா படுகோன், சந்தீப் ரெட்டி வாங்காவின் ‘ஸ்பிரிட்’, நாக் அஸ்வினின் ‘கல்கி 2898 ஏடி - 2’ ஆகிய படங்களில் இருந்து கடந்த ஆண்டு விலகினார்.
தினமும் 8 மணி நேர வேலை; தனது குழுவுக்குச் சிறப்பு வசதிகள் ஆகிய நிபந்தனைகளை அவர் விதித்ததாகவும் அதற்கு தயாரிப்பாளர்கள் சம்மதிக்காததால் விலகியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து சினிமாவில் 8 மணி நேர வேலை விஷயம் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.
இந்நிலையில் தீபிகாவின் கோரிக்கைக்கு நடிகையும் பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி கங்கனா கூறும்போது, “இதை இவ்வளவு பெரிய விஷயமாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் தீபிகா படுகோன் வந்திருக்கும் பின்னணியையும், அவர் அடைந்திருக்கும் உயரத்தையும் பார்த்தால், அந்த இடத்தைத் தன் உழைப்பால் அவர் பெற்றிருக்கிறார் என்பது புரியும்.
அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் இப்போது தாய். திரையுலகின் முன்னணி நடிகையாகவும் திகழ்கிறார். அவர் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்ற விரும்பினால், அதற்கான தகுதியை அவர் முழுமையாகப் பெற்றிருக்கிறார். ஒரு நடிகை தாயான பிறகு, நீண்ட நேரம் வேலை செய்யச் சொல்வது கடினமாகிவிடும்.
திரைத்துறைக்குப் புதிதாக வரும்போது, வளர்ந்து வரும் நிலையில் இருக்கும்போது, உங்களை எளிதில் படத்திலிருந்து மாற்றிவிட முடியும். ஆனால் தீபிகா படுகோன் இப்போது இருக்கும் நிலையில், தயாரிப்பாளர்கள் அவரின் நேரத்துக்கு ஏற்ப வேலையை அமைத்துக் கொள்வார்கள்” என்றார். தீபிகாவும் கங்கனாவும் ஒரு காலத்தில் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.