சென்னை: தொழிற்பயிற்சி பெற்ற பட்டதாரிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு வழங்கும் புரிந்துனர்வு ஒப்பந்தம் அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழகத்தில் தற்போது 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 277 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பாரம்பரிய தொழிற்பிரிவுகளான பிட்டர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், வெல்டர், கணினி உள்ளிட்ட தொழிற்பிரிவுகளிலும் தொழில் 4.0 தரத்திலான அட்வான்ஸ்டு சி.என்.சி, ரோபோடிக்ஸ், எலக்ட்ரிக் வாகனங்கள் போன்ற நவீன தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில் 95 சதவீதம் பேர் உள்நாட்டு முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டனர். சர்வதேச அளவில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்ய முதற்கட்டமாக, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆட்டோமொபைல் துறைக்கான தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
அவர்கள் ஆட்டோமொபைல் சர்வீஸ் டெக்னீசியன்களாக ஜப்பான் நாட்டில் உள்ள எஹிமே-நிசான் நிறுவனத்தில் பணியாற்ற, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் எஹிமே–நிசான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமை செயலகத்தில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
இதன்படி, பயிற்சி பெறும் தொழிற்பயிற்சி பட்டதாரிகளுக்கு ஆறு மாத கால ஜப்பானிய மொழிப் பயிற்சி, தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவை எஹிமே-நிசான் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
ஜப்பான் சென்றபின் மொழிப் பயிற்சி செலவுகள், விசா கட்டணங்கள் ஆகியவை அனைத்தும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.