

கோப்புப் படம்
சென்னை: வண்ணாரப்பேட்டையில் இளைஞர் மரணம் அடைந்தார். அவர், போதை ஊசி செலுத்திக் கொண்டதால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பழைய வண்ணாரப்பேட்டை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு மாடல் லைன் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (24). இவர், தனது மனைவி சங்கீதாவுடன் அண்மையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, அவரை பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்தார்.
ஆகாஷூக்கு கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி நுகரும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆகாஷ், நேற்று முன்தினம் வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார்.
இதைப் கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆகாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, நடத்திய விசாரணையில், சம்பவத்தின்போது ஆகாஷ் போதை ஊசியை உடலில் செலுத்திக் கொண்டதும், அதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பதும் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே ஆகாஷ் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.