சென்னை: தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் முதன்முறையாக டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்யப்படுகிறார்கள். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டுவந்தனர்.
இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, நகர்ப்புற உள்ளாட்சிகளின் பணியாளர்களையும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யும் வகையில் தமிழக அரசு சட்டத்தை இயற்றியது. அதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து அச்சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது. இந்தச் சூழலில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் நகராட்சி, மாநகராட்சி இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக எழுத்தர் பணியிடங்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு நகராட்சி கவுன்சில் பணியின்கீழ் இளநிலை உதவியாளர் பதவியில் 119 காலியிடங்களும், வருவாய் உதவியாளர் பதவியில் 96 காலியிடங்களும், தட்டச்சர் பதவியில் 260 இடங்களும், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) பதவியில் 16 இடங்களும் உள்ளன. தமிழ்நாடு மாநகராட்சி பணியின்கீழ் இளநிலை உதவியாளர் பதவியில் 70 காலியிடங்களும், நேர்முக எழுத்தர் பதவியில் 60 இடங்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி பணியில் இளநிலை உதவியாளர் பதவியில் 134 காலியிடங்களும், பில் கலெக்டர் பதவியில் 107 காலியிடங்களும், தட்டச்சர் பதவியில் 56 காலியிடங்களும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 28 இடங்களும் உள்ளன. இளநிலை உதவியாளர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. தட்டச்சர் பதவிக்கு கூடுதலாக தட்டச்சு தேர்வுகளிலும், அதேபோல் நேர்முக எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு கூடுதலாக சுருக்கெழுத்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இவை தவிர, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் (தமிழ்நாடு மின்சார வாரியம்) இளநிலை உதவியாளர் (கணக்கு) பதவியில் 422 காலிப்பணியிடங்களும் குரூப்-4 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிக்கு பி.காம் பட்டப்படிப்பு கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே, குரூப்-4 தேர்வு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட 46 விதமான பதிவிகளில் 6,574 காலி்ப் பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் நவ.5-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தே்ர்வுக் கட்டணத்தை யுபிஐ வசதி மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்" என கூறியுள்ளார்.
அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், குரூப்-4 தேர்வில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் காலியிடங்களாவது இடம்பெறும் என தேர்வர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 6574 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது தேர்வர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. குரூப்-4 தேர்வில் காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும் அரசை வலியுறுத்தியுள்ளனர்.