தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் தலைவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 24-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைனில் (www.tncoopsrb.in) வரவேற்கப்படுகின்றன.
இதற்கு இன்று (டிசம்பர் 14) முதல் 31-ம் தேதி விண்ணப்பிக்கலாம். உதவியாளர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, கூட்டுறவு பயிற்சி, வயது வரம்பு எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுக் கட்டணம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணைய தளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் அறிவிப்பின்படி, கூட்டுறவு வங்கி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அதோடு கூட்டுறவு மேலாண்மையில் டிப்ளமா அல்லது மேல்நிலை டிப்ளமா படித்திருக்க வேண்டும். தற்போது கூட்டுறவு படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி) வயது வரம்பு கட்டுப்பாடு கிடையாது. மொத்த காலியிடங்களில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி வரை அனைத்து கல்வித் தகுதியையும் தமிழ்வழியிலே படித்திருக்க வேண்டும்.